சமூக ஊடகங்களில் அறிக்கையை வெளியிட ரவி மோகன், ஆர்த்திக்குத் தடை
Ravi Mohan And Aarthi Ravi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரவி மோகன். இவர் சில மாதங்களுக்கு முன் தனது மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்வதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார் . அதைத் தொடர்ந்து இவர்களின் விவாகரத்து குறித்த கருத்துகள் இணையத்தில் வைரலாக இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஊடகங்களில் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது .

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி
கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரவி மோகன் (Ravi Mohan). இவர் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் (Sujatha Vijayakumar) மகளான ஆர்த்தி (Aarthi Ravi) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து (Divorce) செய்வதாக அறிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக நடிகர் ரவி மோகன் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்து தொடர்பான வழக்கில் தம்பதியினர் இருவரும் கோர்ட்டில் ஆஜராகினர். மேலும் இவர்கள் இருவரின் சமாதானத்திற்காக கோர்ட் குடும்பநல மையத்திற்கு அனுப்பிவைத்திருந்தது. அதிலும் இவர்கள் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் தொடர்ந்த நிலையில், மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு (High Court) வழக்கு வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் கோர்ட்டில் நடிகர் ரவி மோகன் தனியாகவும், ஆர்த்தி ரவி தனியாகவும் வந்து ஆஜராகினர். இதைத் தொடர்ந்து ரவி மோகனின் தரப்பில் விவாகரத்து வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து ஆர்த்தி ரவியின் தரப்பில் மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்றும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனுக்களை இருவரும் பதிலளிக்கவேண்டி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தன்னை பற்றி தவறான அறிக்கையை வெளியிட தடைவிதிக்கக் கூறி நடிகர் ரவி மோகனின் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதற்கு உயர்நீதிமன்றம், இருவருக்கும் சமூக ஊடகங்களில் அறிக்கையை வெளியிடத் தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கை 2025ம் ஜூன் மாத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த தகவல் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
ஊடகங்களில் அறிக்கை வெளியிட உயர்நீதிமன்றம் தடை :
சமீப காலமாக ஆர்த்தி ரவி அவரது அம்மா சுஜாதா விஜயகுமார் மற்றும் ரவி மோகன் ஆகியோர் மாறி மாறி அறிக்கை வெளியிடுவது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நடிகர் ரவி மோகனின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் , தன்னை பற்றி அவதூறு அறிக்கைகளை வெளியிட ஆர்த்தி ரவிக்கும், அவரின் தாயார் சுஜாதா விஜயகுமாருக்குத் தடை விதிக்கும்படி மனு அளித்திருந்தார்.
அதற்கு உயர்நீதி மன்றம், ஒட்டுமொத்தமாக மூவருக்கும் சமூக ஊடங்களில் விவாகரத்து பிரச்சினை தொடர்பான அறிக்கையை வெளியிட தடை விதித்துள்ளது. மேலும் இரு தரப்பினருக்கு பரஸ்பரமாக ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கைகளை நீக்கவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கெனிஷா – ரவி மோகன் சர்ச்சையில் மீண்டும் வெடித்த விவாகரத்து விவாதம் :
சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேசனின் மக்கள் திருமணத்திற்கு, நடிகர் ரவி மோகன் தனது தோழி பாடகி கெனிஷாவுடன் ஒரே நிற ஆடையில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்துகொண்ட நிலையில், இணையத்தில் சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்துதான் ஆர்த்தி ரவி தனது குழந்தைகளுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இடத்தை தொடர்ந்துதான் இவர்களின் விவாகரத்து சர்ச்சை மீண்டும் வெடிக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.