“இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளது”.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
Bharathiraja health condition: மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து அண்மையில் சென்னை திரும்பிய பாரதிராஜாவுக்கு உடல்நிலைகுறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஐசியூவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக நலமுடன் இருப்பதாக அவர் சிகிச்சை பெற்றுவரும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அப்போது, முதல் அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. அவர் ஐசியூவில் உள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மாறி மாறி தகவல்கள் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர் தரப்பில், அவர் நலமுடன் உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதோடு, அவரது உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பாரதிராஜாவின் மகன் மாரடைப்பால் காலமானார்:
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்தவர் பாரதிராஜா (84). ’16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வந்த அவர், தற்போது வயது முதிர்வு காரணமாக ஓய்வில் உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு பாரதிராஜாவின் ஒரே மகனும் நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா திடீரென காலமானார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. இதனால் பாரதிராஜா உடைந்து போனார்.
மகன் மறைவில் இருந்து மீள முடியாத பாரதிராஜா:
தொடர்ந்து, மகன் மனோஜ் மறைவால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த நிலையில், மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்தார். தொடர்ந்து, அண்மையில் சென்னை திரும்பினார். இந்நிலையில், கடந்த மாத இறுதியில் உடல்நலக்குறை காரணமாக பாரதிராஜா சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவிவந்தன. இதையடுத்து, மருத்துவமனை தரப்பில் தெளிவான விளக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை:
அதன்படி, பாரதிராஜா உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தற்போது சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதுடன், மருத்துவ நிபுணர்கள் குழுவின் நெருங்கிய கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தேவையான உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதால், அவரது உடல் அளவுகோல்கள் இயல்பு நிலையில் உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.