மத வெறுப்பாக திசை திருப்ப வேண்டாம்… பகல்காம் தாக்குதல் குறித்து நடிகை ஆண்ட்ரியா வேதனை!
Andrea Jeremiah About Pahalgam Terrorist Attack: ஜம்மு காஷ்மீர் அருகே உள்ள பகல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 28 பேர் உயிரிழந்த நிலையில் இந்தியாவில் பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சினிமா பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையோடு வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா (Actress Andrea Jeremiah). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் நாயனகனாக சரத்குமார் நடிக்க மற்றொரு நாயகியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். திருமணம் ஆன ஆண்களுக்கு திருமணத்தை மீறி ஏற்படும் காதல் மற்றும் அவர்களை வேண்டும் என்றே ஹனி ட்ராப் என்று கூறப்படும் ஒரு செயல் மூலம் அந்த ஆண்களை சிக்கவைத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் குற்றத்தைப் பற்றி இந்தப் படம் பேசியுள்ளது. இந்தப் படம் ரசிகரக்ளிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ஆண்ரியா நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்ரும் புன்னகை, அரண்மனை, உத்தம வில்லன், இது நம்ம ஆளு, தரமணி, துப்பறிவாளன், வடசென்னை, புத்தம் புது காலை, மாஸ்டர், வட்டம் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி பாடல்களையும் பாடி வருகிறார். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் ரவிச்சந்தர், தமன், தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இசையில் பாடியுள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் இறுதியாக தமிழில் அனல் மேலே பனித்துளி படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் இவரது படங்கள் மனுஷி, பிசாசு 2, நோ என்ட்ரி, மாஸ்க் என நான்கு படங்களில் வேலை செய்து வருகிறார்.
இதில் இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய நிலையில் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் அருகே பகல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தன்னுடைய இரங்களை தெரிவித்ததுடன் சில கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
அதில் ஆண்ட்ரியா கூறியதாவது, இந்த சம்பவத்திற்குப் பிறகு இன்னும் அதிகமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் காஷ்மீர் மக்களுக்காகவும் என் இதயம் உடைகிறது. நமது நாடு பெருகிய முறையில் துருவமுனைக்கப்பட்டு வரும் நேரத்தில், ஒரு குறிப்பிட்ட மதம்/சமூகம் மீதான வெறுப்பால் திசைதிருப்பப்படாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை.
நான் அடிக்கடி என் கருத்தைப் பேசுவதில்லை, ஆனால் இதைச் சொல்ல வேண்டும் என்று உணர்ந்தேன். இங்கே வெறுப்புக்கு இடமில்லை, என் கருத்துப் பகுதியிலோ, நம் உலகத்திலோ அல்ல என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுடன் அவர் முன்னதாக பகல்காமிற்கு சுற்றுலா சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.