நீங்க யாரு என கேட்ட விராட் கோலி.. சிம்பு எடுத்த சபதம்.. நடந்தது என்ன?
நடிகர் சிலம்பரசன் டிஆர், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை முதன்முதலாக சந்தித்த வேடிக்கையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கோலி தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத சம்பவத்தையும், பின்னர் "பத்து தல" படப் பாடலை அவர் கேட்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

விராட் கோலியை (Virat Kohli) முதன்முதலாக சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்களை நடிகர் சிலம்பரசன் டிஆர் (Silambarasan TR) நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் விராட் கோலி சிம்பு நடித்த ‘பத்து தல’ படத்தில் இடம் பெற்ற நீ சிங்கம் தான் பாடலை அதிகம் கேட்பதாக தெரிவித்திருந்தார். இது மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது. இதனிடையே மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் டிஆர், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படமானது 2025, ஜூன் 5 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படியான நிலையில் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு அந்த படத்தின் குழுவினர் நேர்காணல் அளித்தனர்.
விராட் கோலி பயோபிக்கில் சிம்பு
அப்போது சிலம்பரசனிடம், “விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படம் எடுத்தால் அதில் நீங்கள் கோலியாக நடிக்கலாம். அதே உருவ ஒற்றுமை உங்களிடம் உள்ளது. உங்களிடம் நிறைய வித்தியாசமான கேரக்டர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “சொல்லப்போனால் எனக்கும் நிறைய இதுபோன்ற கமெண்டுகள் வரும். நான் எதற்கு சம்பந்தம் இல்லாமல், இவருடன் நம்ம புகைப்படம் போடுகிறார்கள் என நினைப்பேன். விராட் கோலி அறிமுகமான சமயத்தில் நான் இவர் தான் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என சொன்னேன். ஆனால் அவர் 2 ஆண்டுகளில் ஃபீல்ட் அவுட் ஆகி விடுவார் என எல்லாரும் சொன்னார்கள். அவரிடம் ஆக்ரோஷம் அதிகமாக இருப்பதாக காரணம் கூறினார்கள். அதன்பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். விராட் கோலி இன்றைக்கு எப்படிப்பட்டவர் என சொல்லி தெரிய வேண்டியதில்லை.
கோலியை சந்திக்கும் வாய்ப்பு
விராட் கோலி தனக்கான இடத்தைப் பிடிக்கும் காலக்கட்டத்தில் ஒருமுறை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் போய் பேசலாம் என நினைத்தேன். நேராக சென்று நான் அன்றைக்கு நீங்க இந்த இடத்துக்கு வருவீங்கன்னு நான் நினைச்சேன் என சொல்லி ஜாலியாக பேசலாம் என முடிவு செய்தேன். விராட் கோலி அருகில் சென்று, ஹாய்! என சொன்னேன். அவர் என்னிடம் நீங்கள் யார்? என திரும்ப கேட்டார். நான் சிம்பு என சொன்னதும் எனக்கு தெரியாது என கூறிவிட்டு சென்று விட்டார்.
நான் ஒருமாதிரி என்ன செய்வதென்று தெரியாமல் ‘தேவையா உனக்கு?’ என என்னை நானே கடிந்து கொண்டேன். ஆனால் ஒருநாள் நான் யாருன்னு உங்களுக்கு தெரிய வரும் என நினைத்துக் கொண்டேன். அப்புறம் உங்களை கவனிச்சிக்கிறேன் என சபதம் எடுத்தேன். இப்படியான நிலையில் தான் திடீர்னு ஒருநாள் பெங்களூரு அணியின் நேர்காணல் வீடியோவில் விராட் கோலி நான் நடிச்ச பத்து தல படத்தின் பாடலை சமீபகாலமாக அதிகம் கேட்பதாக கூறினார்.
அதைப் பார்த்து விட்டு தான் அன்றைக்கு நாம் சபதம் எடுத்தோம். இன்னைக்கு நம்ம பாட்டை கேட்கும் அளவுக்கு வந்து விட்டது. இதுவே வெற்றி தான். அதேசமயம் இப்பவும் விராட் கோலிக்கு என்னை தெரியுமா என தெரியவில்லை. ஆனால் பாட்டில் என்னுடைய போட்டோ இருக்கு. அந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாது” என சிலம்பரசன் டிஆர் கூறியுள்ளார்.