புதுச்சேரியில் ஜனநாயக திருவிழா நிறைவு.. வாக்குப்பதிவில் புதிய வரலாறு – தெறிக்கவிட்ட மக்கள்!
Puducherry Assembly Election Conclude: புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த மாநிலத்தில் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு தேர்தலிலில் 90 சதவீதத்தை தாண்டி வாக்குகள் பதிவாகி உள்ளது. இதன் மூலம் புதுச்சேரி புதிய வரலாற்றை படைத்துள்ளது.

புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு
புதுச்சேரி மாநிலத்தில் இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 9) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி வந்தனர். மேலும், தேர்தல் ஆணையம் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, ரோபோ மூலமாக தேர்தல் குறித்தும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் வாக்குப்பதிவு மையத்தில் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அந்த ரோபோவின் மூலம் வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு பூக்கள் வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது. இதே போல, மற்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு மையங்களில் வெவ்வேறு வகையான தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்காளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாலை 6 மணியுடன் புதுச்சேரி மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
90 சதவீதத்தை தாண்டிய வாக்குப்பதிவு
அதன்படி, கடந்த சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி மாநிலம் வாக்குப்பதிவில் வரலாற்றை படைத்துள்ளது. இதில், 5 மணி நிலவரப்படி 86.87 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று இருந்த நிலையில், தற்போது 6 மணி நிலவரப்படி 90 சதவீதத்தை தாண்டி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு தகவல் ஒரு மணி நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, இந்த தேர்தலில் சுமார் 8,25,820 பேர் வாக்களித்துள்ளனர். 1,24,819 பேர் வாக்களிக்கவில்லை.
மேலும் படிக்க: புதுச்சேரி தேர்தல்.. வாக்களித்துவிட்டு பைக்கில் பறந்த முதல்வர் ரங்கசாமி.. வைரல் வீடியோ!!
பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்…
புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக 1,099 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் 1,099 வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. தற்போது, வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதை அடுத்து, அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிக்குள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பின்னர், துப்பாக்க ஏந்திய பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு, புதுச்சேரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மே 4- ஆம் தேதி வெளியிடப்படும் தேர்தல் முடிவுகள்
இந்த ஸ்ட்ராங் ரூமில் அனைத்து வாக்கு பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்பு கேமரா வசதி, வீடியோ பதிவு செய்யும் வசதி, மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து, வருகிற மே 4-ஆம் தேதி ( திங்கள்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
மேலும் படிக்க: புதுச்சேரி தேர்தல்.. வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்?.. உச்சக்கட்ட பரபரப்பு!!