234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நாம் தமிழர் கட்சி.. திருச்சியில் அடுத்த ஆண்டு மக்களின் மாநாடு..
Naam Tamilar Party Conference: திருச்சியில் வரக்கூடிய 2026 பிப்ரவரி 21ஆம் தேதி மக்களின் மாநாடு நடத்த இருப்பதாகவும், அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிக்கப்படும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் வரக்கூடிய தேர்தலில் தனித்து போட்டியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீமான்
டிசம்பர் 2, 2025: 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தரப்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் வகையில் மக்களின் மாநாடு அடுத்த ஆண்டு, அதாவது 2026 பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மும்முறையாக மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழலில் நாம் தமிழர் கட்சி மீண்டும் இந்த முறை தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே இதுவரை எந்தத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டு வரும் வகை குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டிட்வா புயல் பாதிப்பு.. உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு..
தவெக உடன் கூட்டணி இல்லை என சீமான் திட்டவட்டம்:
2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டது. முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த முதல் மாநாட்டைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்ற பல்வேறு யூகங்கள் கிளம்பின. முதலில் விஜய்க்கு ஆதரவாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதன் பின்னர் இரு கட்சிகளின் கொள்கை–கோட்பாடுகள் வேறுபட்டவை; எனவே ஒன்றாக பயணிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். அதன் பின்னர் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மீண்டும் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: 11 நாட்கள் காட்சி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்!
பெண்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கீடு:
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, 10 இடங்களில் போட்டி என்றால் அதில் 5 ஆண் வேட்பாளர்களும் 5 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவர். அதேபோல் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் சரியாக பாதி பெண்கள் போட்டியிடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு திருச்சியில் மக்களின் மாநாடு:
மாற்றத்தை விரும்பும்
மக்களின் மாநாடு 2026தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்:
மாசி 09 | 21-02-2026 மாலை 04 மணியளவில்
இடம்:
திருச்சி pic.twitter.com/LXLIee6GuJ
— NTK IT Wing (@_ITWingNTK) December 1, 2025
நெல்லை மாவட்டத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “மக்கள் பிரச்சினைகளுக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம். வரக்கூடிய டிசம்பர் 15ஆம் தேதி தண்ணீர் மாநாடு நடத்த இருக்கிறோம். சமூக குற்றத்தை அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக அரசு மாற்றியுள்ளது. இயற்கை வளங்களைப் பறித்துக்கொண்டிருப்பதால் நாடு பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறேன்.
திருச்சியில் வரக்கூடிய 2026 பிப்ரவரி 21ஆம் தேதி பெரிய மாநாடு நடத்த இருக்கிறோம். அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்பேன். ‘திருச்சியில் மாநாடு நடத்தினால் திருப்பம் ஏற்படுமா?’ என்ற கேள்விக்கு – அது மத்திய பகுதியானதால் அங்கே நடத்துகிறேன். திருப்பம் சிந்தனையில் தான் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.