த.வெ.க உடன் கூட்டணி அமைக்காதது ஏன்? இது தான் உண்மையான காரணம் – மனம் திறந்த டிடிவி தினகரன்..
TTV Dinakaran Pressmeet: நான் டெல்லிக்கு சென்றபோது கூட, ‘செங்கோட்டையன் உங்கள் நண்பர் தானே, நீங்கள் பேசுங்கள்’ என என்னிடம் கேட்டார்கள். இருப்பினும், நான் அவரை ‘வாருங்கள்’ என்று எப்படி அழைக்க முடியும்? நான் வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

கோப்பு புகைப்படம்
மதுரை, ஜனவரி 27, 2026: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தான் ஏன் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து வந்த அமமுக, மீண்டும் அதே கூட்டணியில் இணைந்தது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, அமமுக TVK-வில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏன் மீண்டும் NDA-வில் இணைந்தது என்பது குறித்து டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.
த.வெ.க உடன் கூட்டணி அமைக்காதது ஏன்?
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “1986–87 காலங்களில் இருந்து ஜெயலலிதாவுடன் இருந்ததன் காரணமாக, அதிமுக நிர்வாகிகள் எங்களோடு நெருங்கிப் பழகுவார்கள். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு நட்போடு இருப்போம். அந்த அடிப்படையில் த.வெ.க-க்கு செல்லும் முன் என்னிடம் தெரிவித்து விட்டுத்தான் சென்றார். நாங்கள் த.வெ.க கூட்டணியில் வர வேண்டும் என அவருக்கும் விருப்பம் இருந்தது. என்னைவிட மூத்தவர் என்பதால், ‘வரவில்லை’ என்று சொல்ல முடியாமல் ‘பார்த்துக்கொள்ளலாம்’ என்றேன். நான் வருவேன் என அவர் நம்பிக்கையாக இருந்தார்.
மேலும் படிக்க: தவெகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையா? விஜய்யை திடீரென புகழ்ந்து பேசிய அருள் எம்எல்ஏ..என்ன காரணம்!
நான் டெல்லிக்கு சென்றபோது கூட, ‘செங்கோட்டையன் உங்கள் நண்பர் தானே, நீங்கள் பேசுங்கள்’ என என்னிடம் கேட்டார்கள். இருப்பினும், நான் அவரை ‘வாருங்கள்’ என்று எப்படி அழைக்க முடியும்? நான் வருவேன் என்று செங்கோட்டையன் நம்பினார்.
அதிமுகவின் அழைப்பின் பேரில் கூட்டணியில் சேர்ந்தேன்:
மற்றபடி, எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. என்னை யாரும் dictate செய்ய முடியாது. 2021 தேர்தலில் நான் நிற்கவில்லை; அதே நிலைப்பாட்டில்தான் இருந்தேன். அரசியல் என்பது சதி நிறைந்த துறை. ஆட்சி அதிகாரம் வரும் போது சகுனிகள், கூனிகள் இருப்பார்கள். ஒரு முனையில் இரு கத்தி வேண்டாம் என நான் நினைத்தேன்.
நான் போட்டியிட வேண்டும் என்று நினைத்தால் கூட நிற்பேன். Healthy relationship வேண்டும் என்பதற்காக நான் போட்டியிடவில்லை. அம்மா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என நட்பு ரீதியாக அதிமுக அழைத்தனர். எடப்பாடி பழனிசாமி, அமமுக தங்கள் கூட்டணியில் வர வேண்டும் என விருப்பப்பட்டார். அம்மா ஆட்சி அமைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் அதிமுக சென்றேன்.”
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்.. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை..
டெல்லி தலைமை அழுத்தம் கொடுத்ததா?
“செங்கோட்டையன் அடிக்கடி டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தவர் தானே? அவருக்கு அழுத்தம் இருந்திருந்தால், அவர் ஏன் TVK-க்கு செல்ல வேண்டும்? யாருக்கும் அழுத்தம் கிடையாது. அம்மா ஆட்சி அமைய வேண்டும் என்றால் அம்மா கூட்டணிக்குத்தான் செல்ல முடியும்; வேறு எங்கும் செல்ல முடியாது.”
திமுகவிற்கு செல்லாதது ஏன்?
OPS தாயார் மறைவிற்கு துக்கம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, ‘திமுக செல்லுகிறீர்களா?’ என கேட்டதற்கு, “மூன்று முறை முதலமைச்சராக இருந்த OPS-உம் நானும் எப்படி திமுக செல்ல முடியும்? அம்மாவால் அரசியலுக்கு வந்தவன் நான். தனித்து நின்றாலும் நிற்பேனே தவிர, வேறு இடங்களுக்கு செல்வது என் மனசாட்சிக்கு ஒத்துக்கொள்ளாது.”
“வைத்தியலிங்கம் திமுகவுக்கு சென்றது வருத்தமளிக்கிறது. நாங்கள் ஒன்றோடு ஒன்று இருந்தவர்கள். அவருடைய சூழ்நிலையால் திமுக சென்றுவிட்டார். நான் அதிமுக கூட்டணிக்கு செல்லமாட்டேன் என அவர் நினைத்தார். நான் எப்படி திமுக செல்ல முடியும்?”
அதிமுக – அமமுக ‘ஜெல்’ ஆகிவிட்டோம். பிரிந்து கிடந்த அதிமுக ஒன்றிணைந்தால் வெற்றி பெற முடியும் என மக்களே சொல்வார்கள். எங்கள் கட்சியினர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக அழுத்தம் கொடுக்கவில்லை. நியாயமான கோரிக்கைகளையே வைப்போம்.
என் முதல் choice NDA தான். அதிமுகவினரிடம் நான் சண்டையிட்டவன். எனக்கு வந்த கஷ்டங்களை மறந்து கூட்டணிக்கு வந்துள்ளேன். அமமுக இணைவதால் யாருக்கும் பாதிப்பு இல்லை.”
2026 தேர்தலில் NDA vs DMK தான் போட்டி:
“2021 வரை அதிமுகவில் இருந்தபோது செங்கோட்டையன் அமைச்சராக இருந்தார். அவர் இப்போது TVK-வில் தானே உள்ளார்? அதிமுக ஊழல் கட்சி என சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையனை சேர்த்துக்கொண்டுள்ளார். இது என்ன stand என புரியவில்லை.
சசிகலாவின் நிலைப்பாடு குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. எமர்ஜென்சி காலத்தில் தங்கள் ஆட்சியை காப்பாற்ற திமுக சமரசம் செய்தது. கூட்டணி கட்சிகளிடம் கண்மூடி, வாய்பொத்தி இருந்தார்கள். திராவிட ஆட்சி என்று சொல்லி டுபாக்கூர் ஆட்சி நடத்துகிறார்கள். 2026 தேர்தலில் NDA vs DMK தான் போட்டி. எல்லா கட்சிகளுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல் அவரும் விரும்புகிறார்”
என தெரிவித்தார்.