சுற்றுலா செல்ல லோன் வாங்க போறீங்களா?.. இந்த விஷயங்கள் குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Planning To Take Loan For Tour | தற்போதைய காலக்கட்டத்தில் சுற்றுலா மற்றும் பயணத்திற்காக கடன் வாங்குவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாவுக்கு கடன் வாங்குவதற்கு முன்னதாக தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ஒரு மனிதன் பிறந்து இறக்கும் வரை அவருக்கு பண தேவை இருந்துக்கொண்டே இருக்கும். இதன் காரணமாக பலரும் தங்களது இளமை பருவத்தில் இருந்தே சேமிக்க தொடங்கி விடுவர். அத்தியாவசிய தேவைகளை தாண்டி வேறு எதற்காகவும் அவர்கள் பணத்தை செலவு செய்ய மாட்டார்கள். ஆனால், சிலரோ வாழ்க்கையில் பணம், பொருளாதாரத்தை விடவு அனுபவம் மிகவும் முக்கியமானது என நினைப்பர். அதற்காக உலக நாடுகளுக்கு அவர்கள் பயணம் செய்வர். ஒருமுறை மனிதராக பிறந்து உலகத்தை சுற்றி பார்க்காமல் செல்வதா என நினைக்கும் பலர் தங்களுக்கென பணத்தை சேமித்து வைக்காமல் பயணம் செய்கின்றனர். மேலும் சிலர் கடன் வாங்கியாவது பயணம் செய்கின்றனர். அவ்வாறு கடன் வாங்கி பயணம் செய்யும் நபராக நீங்கள் இருந்தால், இந்த விஷயங்கள் குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது.
நீங்கள் பெறும் கடன் உங்களை எப்படி பாதிக்கும்?
நீங்கள் சுற்றுலா செல்ல கடன் பெறும்போது நீங்கள் பயணம் செய்வதை தான் கருத்தில் கொள்வீர்கள். நீங்கள பயணத்தை முடித்து வரும்போது உங்களுக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டிய கடமை இருக்கும். எனவே நீங்கள் கடன் பெறும்போது குறைந்த அளவிலான வட்டியுள்ள கடனை பெற வேண்டும். பெரும்பாலான வங்கிகள் 9.99 சதவீதம் முதல் கடனுக்கு வட்டி பெறுகின்றன. ஒருவேளை நீங்கள் குறைந்த கிரெடிட் ஸ்கோர் அல்லது குறைந்த திருப்பி செலுத்தும் காலத்தை கொண்ட கடன் பெற்றால் உங்களக்கு அதிக வட்டி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு EMI உண்மையிலே பயனுள்ளதா?.. அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் என்ன என்ன?
நீங்கள் பெறும் கடன் மாதாந்திர தேவைகளை பாதிக்குமா?
அனைவருக்குமே மாதாந்திர தேவைகள் மற்றும் செலவுகள் இருக்கும். இந்த நிலையில், கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தும் பட்சத்தில் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனுக்காக ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த சூழலில் வேறு சில தேவைகளை உங்களால் பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் போகலாம். எனவே நீங்கள் பெறும் கடனுக்கான மாத தவணை, உங்களது மாதாந்திர தேவைகளுக்கு எந்தவித சிக்கல்களையும் ஏற்படுத்தாமல் இருக்குமா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : பிஎம் கிசான் 21வது தவணை எப்போது?.. மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
பயணத்திற்காக கடன் பெறுவது பயனுள்ளதா?
கல்வி, வீடு கட்டுவது, பொருளாதார தேவைகள் ஆகியவற்றுக்கு கடன் பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், பயணத்திற்காக நீங்கள் செலவு செய்யும் பணம் உங்களுக்கு திருப்பி வராது. எனவே நீங்கள் பயணத்திற்காக கடன் பெறுவதற்கு முன்னதாக நீங்கள் எடுத்த முடிவு சரிதானா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இவை அனைத்தையும் விட மிக முக்கியமான விஷயம் உள்ளது. அது தான் மாத தவணை. நீங்கள் மாத தவணை செலுத்தும்போது அது உங்களது மாத வருமானத்தில் இருந்து 45 முதல் 50 சதவீதத்திற்கும் மேல் தாண்டாமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.