கடும் உச்சத்தில் இருக்கும் தங்கம், வெள்ளி.. தற்போது தங்கம் வாங்குவது சிறப்பானதா?
Gold and Silver Price In Hike | தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,000-த்தை தாண்டியும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தங்கம், வெள்ளி வாங்குவது சரியானதா என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
2024 ஆம் அண்டு முதல் தங்கம் விலை (Gold Price) புதிய உச்சத்தை அடைய தொடங்கியது. அதன்படி, தற்போது மிக கடுமையான உயர்வை சந்தித்து ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.15,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,20,000-த்தை தாண்டியும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் இத்தகைய வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ள நிலையில், அது சாமானியர்களின் எட்டா கனியாக மாறியுள்ளது. இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் தங்கத்தை வாங்கவே முடியாத சூழல் உருவாகிவிடுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது. இவ்வாறு தங்கம் மிக கடுமையான உச்சத்தில் உள்ள சூழலில் தற்போது தங்கம் வாங்குவது சிறப்பானதாக இருக்குமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் டிரம்பின் முடிவுகள்
உலக நாடுகள் மீது வரி விதிப்பது, உலக நாடுகளுக்கு போர் எச்சரிக்கை விடுவது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் (America President Donald Trump) அறிவிப்புகள் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீட்டின் பக்கம் அழைத்துச் செல்கிறது. இதன் காரணமாக உலக வங்கிகள், தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என அனைவரும் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக 2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை உச்சத்தில் உள்ளது. இனியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏறு முகத்தில் தான் இருக்கும் என்று என்ரிச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொன்முடி தெரிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஓய்வு காலத்தை நிதி சிக்கலற்றதாக மாற்றும் 3 திட்டங்கள்.. இத படிங்க!
தங்கம் வாங்க பட்ஜெட் வரை காத்திருக்கலாமா?
தங்கம் கடும் விலை உச்சத்தில் உள்ள நிலையில், 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்ய உள்ளது. பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீததத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது.
இதையும் படிங்க : ஒரே நாளில் ரூ.10,000 உயர்ந்த வெள்ளி.. தங்கமும் அதிரடியாக விலை உயர்ந்தது!
இதேபோல இந்த ஆண்டும் இறக்குமதி வரி குறைக்கப்படும் பட்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 மற்றும் 9 சதவீதமாக உள்ள நிலையில், 1 முதல் 2 சதவீதம் மட்டுமே வரி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும், அவ்வாறு குறைத்தாலும் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் வராது என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.