சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழகத்தில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்?.. மத்திய அரசுக்கு அவசர கோரிக்கை..
Commercial lpg cylinder demand: மத்திய அரசுக்கு ஹோட்டல் உரிமையாளர் சங்கம் எழுதிய கடிதத்தில், வணிக கேஸ் சிலிண்டர் தடையின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ஹோட்டல்களுக்கு விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்கள் எந்தத் தடையும் இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

கோப்புப் புகைப்படம்
சென்னை, மார்ச் 10: தமிழகத்தில் வணிக சிலிண்டர்கள் சிரமமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. சிலிண்டர் விநியோகத்தை திடீரென நிறுத்துவது ஹோட்டல்கள், உணவு விடுதி, கேட்டரிங் சர்வீஸ் மூடலுக்கு வழிவகுக்கும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், உணவு விநியோகம் செய்வது தடைபடும் என்பதோடு, பலரும் வேலை இழக்கும் அபயாம் உள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளனர். வணிக சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக ஹோட்டல்கள் சங்கம் குற்றம்சாட்டியதோடு, சிலிண்டர் விநியோகம் தடைபடுவது சிறு, நடுத்தர தொழில்களுக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: எரிவாயு முன்பதிவு.. பயனாளர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
வணிக சிலிண்டருக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு:
மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போரால் சமையல் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கேஸ் சிலிண்டர்களுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வணிக சிலிண்டர் விலை திடீரென உயர்ந்தது மட்டுமல்லாமல், அதன் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் புக் செய்தால் 2 நாட்களில் ஹோட்டல்களுக்கு டெலிவரி செய்யப்படும் நிலைமை இருந்தது. ஆனால், தற்போது 15 நாட்கள் ஆகியும் தங்களுக்கு சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படவில்லை என ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பெங்களூருவில் ஹோட்டல்கள் இன்று முதல் மூடல்:
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் இன்று முதல் (மார்ச் 10) ஹோட்டல்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில ஹோட்டல் உரிமையாளர்கள் கூறும்போது, அரசு தரப்பில் 15 நாட்களுக்கு முன்பே தங்களுக்கு முறையான அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். திடீரென விநோயகத்தை நிறுத்தினால், நாங்கள் ஹோட்டல்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றனர். மேலும், இதுதொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்திலும் வணிக சிலிண்டர் தட்டுபாடு:
கர்நாடகாவை போல் தமிழகத்திலும் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் 2 நாள் தான் வணிக சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளது. ஆகவே மத்திய அரசு இது தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. இதையொட்டி, மத்திய அரசுக்கு ஹோட்டல் உரிமையாளர் சங்கம் எழுதிய கடிதத்தில், வணிக கேஸ் சிலிண்டர் தடையின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ஹோட்டல்களுக்கு விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்கள் எந்தத் தடையும் இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் சிலிண்டர் கையிருப்பு தொடர்பாக தலைமை செயலர் இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிக்க: இரவோடு இரவாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு..
சிலிண்டர் விலை கடும் உயர்வு:
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில், நாடு முழுவதும் மார்ச் மாத முதல் நாள் தான் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 28, 2026 வரை ரூ.1,899க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் விலை மார்ச் 1ம் தேதி ரூ.29.50 உயர்த்தப்பட்டு ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு அமலாகி சரியாக ஒரு வாரத்திற்குள் தற்போது மீண்டும் விலை கடுமையாக உயர்ந்தது. அந்தவகையில், மார்ச் 7ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ஒரே நாளில் ரூ.114.50 உயர்ந்து தற்போது ரூ.2,043க்கு விற்பனை செய்யப்படுகிறது.