ஓட்டல் மேஜையை அசுத்தப்படுத்திய இளைஞர்கள்.. ரூ.3 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்!
Youths Got Fined for 3 Crore Rupees | சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த இரண்டு இளைஞர்களுக்கு நீதிமன்றம் ரூ.3 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இளைஞர்கள் அட்டகாசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீஜிங், செப்டம்பர் 19 : சீனாவில் (China) ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த இரண்டு இளைஞர்களுக்கு நீதிமன்றம் ரூ.3 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இளைஞர்கள் ஓட்டலின் மேஜைகளை அசுத்தம் செய்வதை வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட நிலையில், ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக அந்த ஓட்டல் நிர்வாகம் பெரிய இழப்பை சந்தித்த நிலையில், அது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
ஓட்டல் மேஜையை அசுத்தப்படுத்திய இளைஞர்கள்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஜியான்யாங் நகரில் பிரபல ஓட்டல் ஒன்று செயல்படுகிறது. அந்த ஓட்டலுக்கு சீனா முழுவதும் சுமார் 1,000 கிளைகள் உள்ளன. இதன் காரணமாக அது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஓட்டலாக உள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரண்டு இளைஞர்கள் அந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். ஆனால், தலைக்கேறிய மதுபோதையில் இருந்த அவர்கள் ஓட்டல் மேஜைகளின் மீது சிறுநீர் கழித்துள்ளனர். அதுமட்டுமன்றி, அவர்கள் தாங்கள் சிறுநீர் கழிப்பதை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : நடுவானில் பறந்த விமானம்.. திடீரென புகை வந்ததால் பரபரப்பு.. அவசர அவசரமாக தரையிறங்கியது!
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஓட்டல் நிர்வாகம்
இளைஞர்களின் அந்த அநாகரிக செயல்கள் அடங்கிய வீடியோ வைரலானதால் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு சாப்பிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 10 மடங்கு அதிக பணத்தை வழங்க வேண்டிய சூழலுக்கு ஓட்டல் நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இதனால் கடும் நிதி இழப்பை சந்தித்த ஓட்டல் நிர்வாகம் இது தொடர்பாக நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதையும் படிங்க : ராணுவ பலத்தில் எந்த நாடு பெரியது? இந்தியாவுக்கு எந்த இடம்? முழு விவரம்
இளைஞர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்
இந்த வழக்கின் விசாரணை ஷாங்காய் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஒரு வழியாக வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், ஓட்டல் மேஜைகளை அசுத்தப்படுத்தி ஓட்டல் நிர்வாகத்தின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியும் நஷ்டத்தை ஏற்படுத்திய இளைஞர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் இத்தகைய அநாகரிக செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாக அமையும் என அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.