கழிவறையில் ரகசிய கேமரா.. 13,000 வீடியோக்களை எடுத்ததாக வாக்குமூலம்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!
Man Captures 13,000 Private Videos | அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர், கழிவறைகளில் ரகசிய கேமராக்களை பொருத்தி நோயாளிகள் மற்றும் சக பணியாளர்களை வீடியோ எடுத்து வந்துள்ளார். அதன்படி, அவர் தற்போது வரை 13,000 வீடியோக்களை எடுத்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
அமெரிக்கா, ஜூலை 27 : அமெரிக்காவின் (America) லாங் ஐலேண்ட் (Long Island) பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியான 48 வயது மருத்துவமனை ஊழியர் சஞ்சய் சியாம்பிரசாத் கழிவறைகளில் ரகசிய கேமராக்களை பொருத்தி நோயாளிகள் மற்றும் சக ஊழியர்களை படம் பிடித்து வந்தது தெரிய வந்துள்ளது. இதுவரை நோயாளிகள் மற்றும் சக பணியாளர்கள் என சுமார் 13,000 வீடியோக்களை அவர் பதிவு செய்துள்ளதாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு சிறை தண்டனை தவிர்க்கப்பட்டு நன்நடத்தை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து 13,000 வீடியோக்களை பதிவு செய்த நபர்
இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்த சியாம்பிரசாத், மருத்துவமனையில் தூக்க தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தான் பணிபுரியும் மருத்துவமனையின் கழிவறைகளில் புகை எச்சரிக்கும் கருவிகளில் ரகசிய கேமராக்களை மறைத்து வைத்து நோயாளிகள் மற்றும் சக ஊழியர்களை படம் பிடித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் பணி நேரத்தின் போது தனது செல்போனில் இத்தகைய வீடியோக்களை வைத்து பார்த்துக்கொண்டு இருந்ததை பார்த்த சக பணியாளர்கள் இது குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
300-க்கும் மேற்பட்ட நபர்களின் வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர்
அதன்படி, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்களின் வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோக்களில் ஏராளமான பொதுமக்களின் உடல் பாகங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. 300-க்கும் மேற்பட்ட வீடியோக்களை போலீசார் கைப்பற்றி இருந்தாலும், 5 பேர் சார்பாக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரணம் வீடியோக்களில் இருக்கும் நபர்களை அடையாளம் காண முடியவில்லை என்பதால் ஒரு குழந்தை உட்பட 5 பேர் சார்பாக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது