Viral News: மறைந்த தாயின் ஆசை.. நிறைவேற்ற மகள் செய்த நெகிழ்ச்சி செயல்!
இங்கிலாந்தில், தனது மறைந்த தாயாரின் நினைவாக, 24 வயது மகளின் செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயார் பயணம் செய்வதை விரும்பியதால், அவரது சாம்பலை பாட்டிலில் வைத்து கடலில் கொட்டினார். இந்த நிகழ்வு பலரின் இதயங்களை உருகச் செய்துள்ளது.

இங்கிலாந்து (England) நாட்டில் மறைந்த தனது தாயாரின் மறைவுக்காக மகள் செய்துள்ள விஷயம் சமூக வலைத்தளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மா என்றால் இந்த உலகத்தில் யாருக்கு தான் பிடிக்காது. ஆறறிவு மனிதர்கள் தொடங்கி உயிரினங்கள் வரை இந்த உலகமே அம்மா என்ற உறவுக்கு கீழ் தான் என நம்பப்படுகிறது. அப்படியான அம்மாவை நாம் இருக்கும்போது நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அனுபவ மனிதர்களின் அர்த்தமுள்ள கருத்தாகும். குடும்ப நலனுக்காக உழைக்கும் அம்மா, தன்னலம் பாராது குடும்பத்தினரின் மகிழ்ச்சியையே தன்னுடைய சந்தோஷமாக எடுத்துக் கொள்பவளாக திகழ்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அப்படி ஒரு நெகிழ்ச்சி நிறைந்த சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது.
நடந்தது என்ன?
இங்கிலாந்து நாட்டின் ஓல்ட்ஹாமைச் சேர்ந்தவர் காரா மெலியா (Cara Melia). 24 வயதான இவரின் தாயார் வெண்டி சாட்விக் தற்போது உயிருடன் இல்லை. இப்படியான நிலையில் மறைந்த தனது தாயார் வெண்டி சாட்விக் பயணம் செய்வதை விருப்பமாக கொண்டிருந்ததை மகள் அறிந்தார். இதனையடுத்து அவரது சாம்பலை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து, ஒரு பேப்பரில் “இது என்னுடைய அம்மா. அவளை மீண்டும் கடலில் தூக்கி எறியுங்கள் – அவள் உலகம் முழுவதும் பயணம் செய்கிறாள்” என்ற நெகிழ வைக்கும் வார்த்தைகளையும் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், காரா ஸ்கெக்னஸ் கடற்கரையில் நின்றுக்கொண்டு கடலுக்குள் தூரமாக பாட்டிலை விட்டுள்ளார். அவரது மறைந்த அம்மாவான வெண்டி சாட்விக் ஐந்து குழந்தைகளின் தாயாவார். 51 வயது அவர் கண்டறியப்படாத இதய நோயால் காலமானதாக சொல்லப்படுகிறது. காரா எறிந்த 12 மணி நேரத்திற்குப் பிறகு, அந்த பாட்டில் மீண்டும் கரைக்குத் திரும்பியுள்ளது. அதை கடற்கரைக்கு ஒரு குடும்பத்தினர் கண்டனர். அதனுள் ஏதோ பேப்பர் இருப்பதைக் கண்டு யாரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டார்களா என பிரித்த படித்தபோது தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்கள் இந்த நெகிழ்ச்சியான செய்தியை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கெல்லி ஷெரிடன் என்ற பெண் தான் இதனை செய்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “ஓல்ட்ஹாமில் இருந்து காராவைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் இதை அனைவரும் பரவலாகப் பகிர முடியுமா? என கேட்டு, “இன்று அதிகாலையில் பட்லின்ஸ், ஸ்கெக்னஸ் கடற்கரையில் இந்த அழகான பெண்ணைக் கண்டோம். அவள் கேட்டபடி அம்மா மீண்டும் கடலில் சேர்க்கப்பட்டாள். காராவின் அம்மாவுக்கு மகிழ்ச்சியான பயணங்கள் அமைய வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு காரா மீண்டும் பதிலளித்தார்.
இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் காரா மெலியாவுக்கு தங்கள் ஆறுதல்களையும், அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.