1 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி, ஒரு பெட்ரோல் பங்க் – ரூ.21 கோடிக்கு வரதட்சணை – வைரலாகும் வீடியோ
Rajasthan wedding : ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூ.21 கோடி மதிப்பிலான நிலம், நகை, ரொக்கம் மற்றும் மற்ற பல பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 'மெய்ரா' (Mayra) எனப்படும் பாரம்பரிய நிகழ்வில் மணமகளின் உறவினர்களால் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
இருமனம் இணைவது தான் திருமணம் என சொல்லப்பட்டாலும் பெரும்பாலான திருமணங்களை பணம் தான் தீர்மானிக்கிறது. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தவறு என பல ஆண்டுகளாக அறிவுறுத்தப்ப்டடு வந்தாலும் இன்றும் திருமணங்களை முடிவு செய்வது வரதட்சணை தான். வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது கௌரவமாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணமகள் தரப்பில் ‘மாய்ரா’ எனப்படும் ஒரு திருமணத்துக்கு முந்தய நிகழ்வில் ரூ.21 கோடி மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியிருக்கிறது. . இந்த நிகழ்வின் வீடியோவை புகைப்படக் கலைஞர் சோனு அஜ்மேர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மாய்ரா’ என்றால் என்ன?
ராஜஸ்தானில் ‘மாய்ரா’ அல்லது ‘பாட்’ எனப்படும் நிகழ்வு, திருமணத்தின் போது மணமகளின் தாய் மாமன்கள் அல்லது சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கும், சகோதரியின் மகள்களுக்கும் அன்பும் ஆசீர்வாதமும் அடங்கிய பரிசுகளை வழங்கும் மரபு நிகழ்வாகும். இது காலங்காலமாக நடைபெறும் சடங்காக பார்க்கப்படுகிறது. பெயரளவில் அன்பும் ஆசிர்வாதமும் என சொல்லப்பட்டாலும் பணமும் நகையும் தான் பெரும்பாலும் இந்த மாய்ரா நிகழ்வில் வழங்கப்படுகின்றன.
வியப்பூட்டும் பரிசுகளின் பட்டியல்
அந்த வைரல் வீடியோவில், ஒரு நபர் அந்த பரிசுகளின் விவரங்களை அறிவிக்கிறார். இதில் இடம் பெற்ற பரிசுகள்:
-
1 கிலோ தங்கம்
-
15 கிலோ வெள்ளி
-
210 பிகா நிலம்
-
ஒரு பெட்ரோல் பங்க்
-
அஜ்மேரில் ஒரு மனை
-
ரூ.1.51 கோடி பணம்
-
வாகனங்கள், ஆடைகள் மற்றும் பிற பொருட்கள்
இதன் மொத்த மதிப்பு முதலில் ரூ.15.65 கோடி எனக் கூறப்பட்டாலும், அடுத்தடுத்து வெளியான வீடியோக்களில் பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.21 கோடி என தெரியவந்தது. இந்த விழாவில் 600-700 குடும்பத்தினர்கள் 100 கார்கள் மற்றும் 4 சொகுசு பேருந்துகளில் வந்தனர், மற்றும் 4 சூட்கேஸ்களில் பரிசுகளைக் கொண்டு வந்தனர்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 64 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதனைச் சுற்றி பல்வேறு விமர்சனங்களும் பாராட்டுகளும் எழுந்து வருகின்றன. அதில் ஒருவர் இதில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமை. பெண் வீட்டார்கள் இந்த பணத்தை வைத்திருந்த அந்த பெண்ணின் எதிர்கால தேவைக்கு பயன்படுத்தலாம் என குறிப்பிட்டிருக்கிறார். மற்றொருவர் ரூ. 21 கோடிக்கு மணமகனை விற்று விட்டார்கள் போல என கமெண்ட் செய்திருக்கிறார். மேலும் இது வரதட்சணைக் கொடுமையை ஆதரிப்பதாக இருப்பதாகவும், இது போல மற்ற மணமகன்களும் வரதட்சணை கேட்டால் என்ன ஆவது என தங்கள் வேதனைகளை பகிர்ந்துள்ளனர்.