கோடையில் ஏசியால் ஏற்படும் பாதிப்புகள் – நிபுணர்கள் சொல்வது என்ன?
Stepping Into AC After Sun: கடுமையான வெயிலில் வெளியே சென்ற பிறகு உடனடியாக ஏசி அறைகளில் நுழைவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் இந்தக் கட்டுரையில், வெயிலின் வெப்பத்திலிருந்து நேரடியாகக் குளிர்ந்த ஏசி அறைக்குள் நுழைவதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்த 2026 ஆம் ஆண்டு கோடைகாலம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெப்பம் உச்சத்தை தொட்டு வருகிறது. இருப்பினும் டெலிவரி ஊழியர்கள், காவல்துறையினர், நெடுஞ்சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் சென்ற பிறகு , ஏசி வசதி கொண்ட அறைக்குள் நுழையும் போது கிடைக்கும் குளுமை அலாதியானது.
வெயிலில் இருந்த பிறகு உடனடியாக ஏசி அறைக்குள் செல்வது உடலுக்கு ஆபத்தா?
ஆனால், இப்படி கடுமையான கோடை வெயிலில் வெளியே சென்ற பிறகு உடனடியாக ஏசி அறைகளில் நுழைவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் இந்தக் கட்டுரையில், வெயிலின் வெப்பத்திலிருந்து நேரடியாகக் குளிர்ந்த ஏசி அறைக்குள் நுழைவதற்கு முன் நீங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோடைக்காலம் தொடங்கியவுடனேயே, தாங்க முடியாத வெப்பத்தைச் சமாளிக்க மக்கள் ஏசியை பயன்படுத்த தொடங்கிவிடுகிறார்கள். வெயிலில் அலைந்த பிறகு வீட்டிற்குத் திரும்பியதும் உடனடியாக ஏசியை ஆன் செய்துவிட்டு, வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க அதற்கு நேர் எதிரே அமர்வது மிகுந்த இதமாக உணரப்படுகிறது. இருப்பினும், இந்த பழக்கம் உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக, வெளிப்புற வெப்பநிலைக்கு ஏற்ப நம் உடல் தன்னைத்தானே இயற்கையாகவே மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இந்த நிலையில் நாம் வெயில் மற்றும் அதிக வெப்பத்தில் இருக்கும்போது வியர்வை வருவது, இரத்த நாளங்கள் விரிவடைதல் போன்ற செயல்முறைகள் மூலம் உடல் தனது வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது. இது நம் உடலிலேயே இயல்பாக அமைந்துள்ள ஒரு இயற்கையான பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.
வெயிலின் வெப்பத்திலிருந்து, மிகக் குறைந்த வெப்பநிலை கொண்ட ஏசி அறைக்குள் நாம் திடீரென மாறும்போது, நம் உடலுக்குள் இயங்கும் இந்த இயற்கையான பாதுகாப்பு அமைப்புகள் சீர்குலைகின்றன. வெப்பநிலையில் ஏற்படும் இத்தகைய திடீர் மாற்றங்கள் சளி, இருமல் போன்ற பிரச்னைகளையும், கடுமையான தலைவலி மற்றும் தசை வலிகளையும் ஏற்படுத்தக்கூடும். மேலும், இந்தச் செயல்முறை நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மீதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
வெயிலில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய உடனேயே, ஏசி அறைக்குள் நுழைவதற்கு முன்பு, சிறிது நேரம் நிழலிலோ அல்லது மின்விசிறியின் கீழோ அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டும். உங்கள் உடல் வெப்பநிலை ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு மட்டுமே, ஏசி அறைக்குள் நுழைவது பாதுகாப்பானது. அதேபோல, ஏசி அறைக்குள் நுழைவதற்குச் சற்று முன்பு, மிகக் குளிர்ந்த நீரைக் குடிப்பதும் அறிவுறுத்தப்படுவதில்லை. ஏசி அறைக்குள் நுழைவதற்கு முன்பு சில நிமிடங்கள் இடைவெளி விடுவதன் மூலம், உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகாமல் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.