சிறையில் அடைக்கப்பட்டும் திருந்தவில்லை.. பாளையங்கோட்டை சிறை அதிகாரி-வார்டன் மீது தாக்குதல்.. நெல்லையில் பெரும் பரபரப்பு!
Palayamkottai Central Prison : பாளையங்கோட்டை மத்திய சிறையில் உதவி அதிகாரி மற்றும் சிறை வார்டன் மீது இரு கைதிகள் இணைந்து தாக்குதல் நடத்தினர். இதில், அதிகாரிகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் மத்திய சிறைச்சாலை (palayamkottai central prison) அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 1,600- க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சிறை காவலர்கள் மற்றும் தமிழக போலீசார் ஆகியோர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சிறையில் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த மந்திரம் என்பவரது மகன் கோட்டை என்ற சுந்தரம் மற்றும் மானூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் மகேஷ் ஆகிய இருவர் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் 5- ஆவது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அதே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு விசாரணை கைதியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
கைதிக்கு மிரட்டல் விடுத்த இரு கைதிகள்
இதில், உனக்கு தரும் சாப்பாட்டை எங்களுக்கு நீ தர வேண்டும். இல்லையெனில், உன்னை கொன்று விடுவதாக அந்த இருவரும் மிரட்டி உள்ளனர். இதனால், அச்சம் அடைந்த அந்த கைதி இது தொடர்பாக சிறை வார்டன் மணிகண்டன் ( 54 வயது) என்பவரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், மிரட்டல் விடுத்த இரு கைதிகளான சுந்தரம் மற்றும் மகேஷ் ஆகிய இருவரை சிறை வார்டன் மணிகண்டன் விசாரணைக்கு வருமாறு அழைத்து இருந்தார். ஆனால், அவர்கள் விசாரணைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, சிறை வார்டன் மணிகண்டன் நேரடியாக அந்த கைதிகளை சந்தித்து விசாரணை மேற்கொள்ள சென்றிருந்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள்கள்.. திருநெல்வேலியில் 600 மாத்திரைகள் பறிமுதல்.. 4 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!




சிறை வார்டன்- உதவி அதிகாரி மீது தாக்குதல்
அதன்படி, அந்த கைதிகளிடம் சிறை வார்டன் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த கைதிகள் மகேஷ் மற்றும் சுந்தரம் ஆகிய இருவரும் சேர்ந்து வார்டன் மணிகண்டனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பான சூழல் நிலவியது. இதை அறிந்த சிறை உதவி அதிகாரி காசி பாண்டியன் ( 53 வயது) என்பவர் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் அவர் மீதும் கைதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இந்த தாக்குதலில், காசி பாண்டியன் எனக்கு தலை மற்றும் முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், சக வார்டன்கள் இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் கைதிகள் மகேஷ், சுந்தரம் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்? தூத்துக்குடி- திருநெல்வேலி மக்களுக்கு எச்சரிக்கை…!