கரூர் செல்லும் விஜய்… அனுமதி கோரி டிஜிபிக்கு தவெக கடிதம்!
Karur TVK Rally Stampede : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி கோரி தவெக சார்பில் டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம் என்று தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்
சென்னை, அக்டோபர் 08 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி கோரி தவெக சார்பில் டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளோம் என்று தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசிய நிலையில், தற்போது அவர்களை நேரில் சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை நடைபெற்றது. இந்த பரப்புரை கூட்டத்தில் 20,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால், விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஐஜி அஸ்ராக் கார்க் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி, ஐஜி அஸ்ராக் கார்க் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. அதோடு, தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்தி வருகிறது. இந்த சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கு மேல் ஆகியும் சோகவடு இன்னும் நீங்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
Also Read : அண்ணனாக இருந்து எல்லாவற்றை செய்வேன்.. விரைவில் சந்திப்பேன் ‘ – வீடியோ காலில் பேசிய விஜய்..
அனுமதி கோரி டிஜிபிக்கு தவெக கடிதம்
ஆனால் இன்னும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் செல்லவில்லை. இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதோடு, 2025 அக்டோபர் 7ஆம் தேதியான நேற்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் 41 பேரின் குடும்பங்களிடம் வீடியோ காலில் விஜய் பேசியிருந்தார். அப்போது, விரைவில் நேரில் சந்திப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டு வருகிறார். இதற்காக அனுமதி கோரி டிஜபியிடம் தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : விஜய்க்கு உங்க அட்வைஸ் என்ன ? கரூரில் கமல்ஹாசன் சொன்ன கமெண்ட்
இதுகுறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்கள் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை விஜய் விரைவில் நேரில் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று அனுமதி கேட்டிருக்கிறோம்” என்றார்.