காரைக்குடியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்.. மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் அகற்றம்..
டிட்வா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவானது. முழங்கால் அளவிற்கு தேங்கியிருந்த மழைநீரால், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கோப்பு புகைப்படம்
காரைக்குடி, டிசம்பர் 4, 2025: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகத் டிட்வா புயலின் தாக்கம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற வட தமிழக மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தலைநகர் சென்னையை போலவே, தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாத மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தால் வீட்டிலேயே முடங்கிய மக்கள்:
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவானது. முழங்கால் அளவிற்கு தேங்கியிருந்த மழைநீரால், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட கடைக்கு செல்ல முடியாத நிலையும், குப்பைகள் மற்றும் கழிவுநீர் மழைநீரோடு கலக்கும் அபாயமும் இருந்ததால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்திருந்தனர். தேங்கிய மழைநீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டது.
மேலும் படிக்க: விஜய்யின் பொதுக்கூட்டம் எப்போ தெரியுமா? அனுமதி கேட்டு தவெக சார்பில் விண்ணப்பம்
இந்த சூழலில், அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபு உடனடியாக களத்தில் இறங்கி, மழைநீர் சூழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். உடனடியாக தனது சொந்த ஏற்பாட்டில் புதிய, அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களை (Electric Motors) வரவழைத்து, தேங்கிய நீரை வெளியேற்ற தேவையான லாரிகள் மற்றும் இதர உபகரணங்களையும் அந்த இடத்திற்கு விரைந்து கொண்டு வரப்பட்டது.
மோட்டார் பம்புகள் மூலம் நீர் அகற்றம்:
மேலும், தவெக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து வைரவபுரம் 2, 3 மற்றும் 5-வது வீதிகள் மற்றும் நேரு நகர் பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் இறைத்து லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த பணியின் விளைவாக, வீடுகளை சூழ்ந்திருந்த மழைநீர் வடிந்து, அப்பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.
மேலும் படிக்க: இந்த மாதம் முதல் விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!!
“மழை நின்றாலும் தண்ணீர் வடியாததால் நாங்கள் மிகுந்த சிரமத்தில் இருந்தோம். பிரபு அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் இப்போது நிம்மதியாக இருக்கிறோம்,” என்று அப்பகுதி வாசிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.