AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பரமக்குடி முதல் பழனி வரை… பிரதமர் மோடி திறந்து வைத்த 5 மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் – என்ன ஸ்பெஷல்?

Amrit Bharat Station Scheme : அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட தமிழகத்தின் 5 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11, 2026 இன்று திறந்து வைத்தார். அதில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பரமக்குடி முதல் பழனி வரை… பிரதமர் மோடி திறந்து வைத்த 5 மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள்  – என்ன ஸ்பெஷல்?
பிரதமர் மோடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Oct 2026 20:03 PM IST

சென்னை, அக்டோபர் 11 : அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட தமிழகத்தின் 5 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11, 2026 இன்று திறந்து வைத்தார். அதில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், திண்டுக்கல் மாவட்டம் பழனி, நாமக்கல், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, வேலூர் கன்டோன்மென்ட் ஆகிய 5 நிலையங்கள் தெற்கு ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதில் 26 நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பிரதமர் மோடி திறந்து வைத்த 5 மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள்

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தி நவீனமயமாக்கும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு மத்திய அரசால் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம் தொடங்கப்பட்டது. பல வகையான போக்குவரத்தை இணைப்பதும், பயணிகள் எளிதில் நிலையத்தை அணுகும் வசதியை மேம்படுத்துவதையும் இலக்காக கொண்டு ஒவ்வொரு நிலையத்துக்கும் ஏற்ற வகையில் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டது. இதில் தற்போது பிரதமர் மோடி திறந்து வைத்த 5 ரயில் நிலையங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிக்க : திருக்குறள் வாழ்க்கைக்கான வழிகாட்டி… ரஷ்ய அதிபருக்கு திருக்குறள் பரிசு – மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

அம்பாசமுத்திரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நிலையத்தில் புதிய நுழைவு மற்றும் வெளியேறும் வளைவுகள், மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளன. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டும் ஓடுகள், புதிய நடைமேடை மேற்கூரைகள், துருப்பிடிக்காத எஃகுக் குடிநீர் வசதி ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பழனி

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, பழனி ரயில் நிலையம் மிகவும் முக்கியமானது. இந்த ரயில் நிலையம் சுமார் ரூ.20 கோடி செலவில் புதிய நுழைவு வளைவு, புதுப்பிக்கப்பட்ட நிலையக் கட்டடம், வாகனங்களுக்கான மேற்கூரையிட்ட நிறுத்துமிடம், புதிய காத்திருப்பு அறை, கழிப்பறை வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு உயரம் குறைந்த பயணச்சீட்டு கவுன்ட்டரும் அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்

நாமக்கல் நிலைய கட்டடத்தின் தரைத்தளமும் முதல் தளமும் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அறை, உயர்தர ஓய்வறை, இரண்டு பயணச்சீட்டு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன லிஃப்ட் வசதியுடன் கூடிய 6 மீட்டர் அகல நடைமேம்பாலம், எல்இடி விளக்குகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

பரமக்குடி

பரமக்குடியில் சுமார் 1,250 சதுர மீட்டர் பரப்பில் மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய காத்திருப்பு அறை, கழிப்பறைகள், மேம்படுத்தப்பட்ட பயணச்சீட்டு கவுன்ட்டர், புதிய நடைமேம்பாலம், லிஃப்ட்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உள்ளூர் கலை, பண்பாட்டை வெளிப்படுத்தும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிக்க : மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை, கோதாவரி – காவரி இணைப்பு – பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

வேலூர் கன்டோன்மென்ட்

வேலூர் நகரின் மையப்பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தில் புதிய நுழைவு முகப்பு, பாதசாரிகளுக்குத் தனி வழியுடன் கூடிய அணுகுசாலை, மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அறை, முன்பதிவுப் பயணிகளுக்கான ஓய்வறை, தங்கும் அறை, புதிய கழிப்பறை வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நடைமேடைகளில் 10 மேற்கூரைப் பகுதிகள், டிஜிட்டல் கடிகாரங்கள், அறிவிப்பு அமைப்புகள், லிஃப்ட், செல்ஃபி பாயின்ட் ஆகியவையும் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வாகன நிறுத்துமிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Follow Us