Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பொன்முடி மீதான புகாரில் புலன் விசாரணை செய்ய தயங்கினால்.. சிபிஐக்கு மாற்றப்படும் என எச்சரித்த நீதிபதி..

Ponmudi Case - Chennai High Court: பெண்கள், சைவம் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான புகார்களை காவல் துறையினர் விசாரிக்க தயங்கினால், வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொன்முடி மீதான புகாரில் புலன் விசாரணை செய்ய தயங்கினால்.. சிபிஐக்கு மாற்றப்படும் என எச்சரித்த நீதிபதி..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 04 Jul 2025 17:15 PM

சென்னை, ஜூலை 4, 2025: பெண்கள், சைவ – வைணவ சமயங்கள் குறித்து வெறுப்பு பேச்சு பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் காவல் துறையினர் புலன் விசாரணை செய்யத் தயங்கினால், வழக்குகள் சிபிஐ -க்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இந்த விஷயம் பூதாகரமாக வெடித்தது. இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு:

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டி, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.இதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பொன்முடியின் பேச்சு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நேரத்தில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்பின், பொன்முடிக்கு எதிராக மூன்று காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தியதில், அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனக் கூறி, அந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

அதன்பிறகு, தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை தான் பொன்முடி குறிப்பிட்டு பேசினார் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என எச்சரிக்கை:

இதையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகார்கள் மீது காவல் துறையினர், புலன் விசாரணை செய்ய தயங்கினால், விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என எச்சரித்த நீதிபதி, பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நல்ல விஷயங்களை சொல்லியிருக்கலாம் எனக் கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.