திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. தூத்துக்குடியில் வரும் ஜூலை 7 அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..
School Leave: வரும் 2025, ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா காலை 6.15 முதல் 6.50 மணிக்குள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று ஒரு நாள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி வருகின்ற 2025 ஜூன் ஜூலை 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. அறுபடை வீடுகளில் தனி சிறப்பு வாய்ந்தது இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். சாதாரண நாட்களில் கூட இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த திருக்கோயில் பல ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக 300 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்:
பணிகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற 2025 ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாகசாலைகள் அமைத்து ஹோமங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வருகிறது. இதற்காக ராஜ கோபுரத்திற்கு அருகே 8000 சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவையொட்டி குறைந்தது 10 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் போலீசார்:
பொதுவாகவே முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களான வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, பங்குனி உத்திரம், கார்த்திகை, சூரசம்ஹாரம், சஷ்டி போன்ற நாட்களில் ஆயிரம் கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக பால்குடம் ஏந்தியும், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் வழிபடுவார்கள்.
இந்நிலையில் குடமுழுக்கு விழாவிற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆளில்லா விமானம் மூலமும், ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரம் அமைத்தும், போலீஸ் பூத் அமைத்தும் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு வசதிக்காக சிறப்பு தரிசன வழி அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இப்படி பல கட்டங்களாக ஏற்பாடுகள் நடைபெற்ற வரும் நிலையில் ஜூலை 7 2025 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.