16வது நாளாக நீடிக்கும் போராட்டம்.. ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.. சென்னையில் பரபரப்பு!!
Teachers Protest | கடந்த ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் பலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு அறிவித்திருந்தது. எனினும், ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை, ஜனவரி 10: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை எழும்பூரில் இன்று காலை 16வது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், ஆசியிர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு போராட்டத்திற்கு வந்தனர். அப்போது, எழும்பூரில் உள்ள உணவகங்களில் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளுடன் சாப்பிட்டு கொண்டு இருந்ததாக தெரிகிறது. அந்தசமயத்தில் உணவகங்களுக்குள் புகுந்த போலீசார், குழந்தைகள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல், அவர்களை சாப்பிடவும் விடாமல், உணவக உரிமையாளர்களை மிரட்டி கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: தவெக – தேமுதிக கூட்டணி உறுதி?.. தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த விஜய்யின் புதிய பிளான்?
நாங்கள் என்ன தீவிரவாதிகளா?
அவர்களை குண்டுக்கட்டாக அழைத்துச் சென்ற நிலையில், ஆசிரியர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாங்கள் என்ன தீவிரவாதிகளா? இப்படி எங்களை சாப்பிடக் கூட விடாமல் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் செல்கின்றனர் என ஆதங்கப்பட்டனர். அதோடு, தாங்கள் குழந்தைகளுடன் வந்துள்ளதை கூறி, அவர்களை சாப்பிட விடும்படி கேட்டுக்கொண்டபோது கூட, அவகசாம் தர போலீசார் மறுத்திவிட்டதாக கொதித்தனர்.
16வது நாளாக தொடரும் போராட்டம்:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த மாதம் 26ம் தேதி முதல் சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய 15வது நாள் போராட்டத்தில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற 1,500 இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
சாப்பிட விடாமல் கைது செய்த போலீசார்:
அந்தவகையில், இன்று 16வது நாளாக சென்னை எழும்பூர் இர்வின் மேம்பாலம் பகுதியில் போராட்டம் நடத்த ஆசிரியர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக போராட்டத்தை இடத்தை அடைந்த ஆசிரியர்கள் அருகில் இருந்த உணவகங்களில் தங்கள் குழந்தைகளுடன் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், உணவகங்களில் வைத்தே ஆசிரியிர்கள் போலீசாரை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இதில், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கைகளை பிடித்து இழுத்து குண்டுக்கட்டாக சாலையில் தரதரவென்று இழுத்துச்சென்று கைது செய்தனர்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்:
ஏற்கெனவே, கடந்த ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் பலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு அறிவித்திருந்தது. எனினும், தங்களது கோரிக்கை நிறைவேற வேண்டும் என வலியுறுத்தி ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: யாருடன் கூட்டணி?.. “பிரேமலதா தான் துணை முதலமைச்சர்”.. தேமுதிக மாநாட்டில் பரபர!!
பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டம்:
இதேபோல், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பகுதிநேர ஆசிரியர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, நெற்றியில் ‘181’ என எழுதி ஆசிரியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியும் ஆசிரியர்கள் முழக்கம் எழுப்பினர்.