வெயிலுக்கு குட்பை.. 4 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை.. எங்கெங்கு தெரியுமா?
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வரும் நாட்களில் படிப்படியாக குறையக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 17 : தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை வெளுக்கும் (tamil nadu weather alert) என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெப்பம் தணியும் சூழல் உள்ளது. தமிழகத்தில் 2025 மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயிலோடு, அனல் காற்றும் வீசி வந்தது. வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவாகி வந்தது. இதற்கிடையில், மே மாதம் சில நாட்கள் வெயில் தாக்கம் இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் தணிந்து, மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
4 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை
இதன் காரணமாக, 2025 மே 17ஆ தேதி 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 2025 மே 17, 18ஆம் தேதிகளில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2025 மே 19ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 20ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு தெரியுமா?
சென்னை பொறுத்தவரை, 2025 மே 17ஆம் தேதி நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும், அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025 மே 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனவே, வரும் நாட்களில் பெரிய அளவில் வெயிலின் தாக்கம் இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். முன்னதாக, இனி சென்னையில் வெயில் இருக்காது என்றும், வரும் நாட்களில் மழை பெய்யும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை எதுவும் காணப்படவில்லை. மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளை போல, இந்த மே மாதத்தில் சென்னையில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தாண்டாது” என குறிப்பிட்டு இருந்தார்.