வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? கவலையில்லை.. இப்படியும் விண்ணபிக்கலாம்.. என்ன செய்ய வேண்டும்?

SIR Tamilnadu: டிசம்பர் 4ஆம் தேதிக்குள் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் தெரிவித்துள்ளார். மேலும்,ஒரு வாக்காளரின் பெயர் இடம்பெறாவிட்டால், உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம்–6 உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? கவலையில்லை.. இப்படியும் விண்ணபிக்கலாம்.. என்ன செய்ய வேண்டும்?

கோப்பு புகைப்படம்

Published: 

28 Nov 2025 06:40 AM

 IST

சென்னை, நவம்பர் 28, 2025: தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான படிவங்கள் வழங்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், டிசம்பர் 4ஆம் தேதிக்குள் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் தெரிவித்துள்ளார். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இடம்பெறாவிட்டால், உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம்–6 உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 4 வரை காத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்தல்:

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து பல முக்கிய விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், இந்த கணக்கெடுப்பு கட்டத்தில் தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் தொடர்பில் மாவட்ட தேர்தல் அலுவலர்களால் அதிக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி? விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு

பூர்த்தி செய்து சமர்பித்த வாக்காளர்களின் பெயர் நிச்சயம் இருக்கும்:

அனைத்து கணக்கீட்டு படிவங்களையும் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள், டிசம்பர் 4, 2025 வரை காத்திருக்காமல், படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 09.12.2025 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவரும் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 50 கணக்கீட்டு படிவங்களை மட்டுமே உறுதிமொழியுடன் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் படிக்க: ‘அண்ணன் செங்கோட்டையன்’.. வரவேற்பு தெரிவித்து விஜய் வீடியோ வெளியீடு!

வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் மீண்டும் சமர்ப்பிப்பதில் முழு ஒத்துழைப்பையும் வழங்கி, இந்த ஜனநாயக செயல்பாட்டில் தங்களின் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சிறப்பு தீவிர திருத்த நடைமுறையின் பங்கேற்பாளர்களுக்கான முக்கிய குறிப்புகள்:

  • 2002/2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரை கண்டறிய இயலாத நிலையில், 04.12.2025க்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்தால், அவ்வாக்காளரின் பெயர் 09.12.2025 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
  • 04.12.2025க்குள் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அவ்வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
  • மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
  • வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிட்டால், உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம்–6 உடன் உறுதிமொழிப்படிவத்தை இணைத்து அவரது பெயரை புதிதாக பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை (Claims & Objections) காலம்:

09.12.2025 முதல் 08.01.2026 வரை. இக்காலத்தில் —

  •  பெயர் சேர்க்க,
  •  பெயர் நீக்க,
  • அல்லது ஏற்கனவே உள்ள பதிவுக்கு அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

அறிவிப்புக் கட்டம் (Notice Phase):

09.12.2025 முதல் 31.01.2026 வரை. இந்த காலத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்துப், தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் விசாரணை அறிவிப்புகள் வழங்கப்படும். கடைசியாக வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரையில் பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் குறித்து ஸ்மிருதி மந்தனா எடுத்த முக்கிய முடிவு
இந்திய அரசாங்கத்தின் CNAP அமைப்பு.. இதன் நோக்கம் என்ன?
குளிர் காலத்தில் அதிகளவில் டீ, காபி குடிப்பீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!
லோன் வாங்கியோருக்கு குட்நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!