Tamil Nadu CM MK Stalin: மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

DMK's 5th Year in Power: தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்தாண்டு நிறைவடைவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் விழா நடைபெற்றது. அரசின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றி குறித்து ஸ்டாலின் பேசினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், மக்கள் ஆதரவுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tamil Nadu CM MK Stalin: மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published: 

06 May 2025 21:46 PM

சென்னை, மே 6: தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்து நாளையுடன் (07.05.2025) 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து, மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, “ எனது தலைமையிலான திமுக அரசு பதவியேற்று நாளை (07.05.2025) 5ம் ஆண்டு தொடங்குகிறது. இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சி, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆட்சி, மத்திய அரசுக்கு வழிகாட்டும் ஆட்சி திமுக (DMK) ஆட்சிதான். வருகின்ற 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுகவே 7வது முறையாக ஆட்சியமைக்கும்.” என்றார்.

மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு வெற்றி முகம்:

தொடர்ந்து பேசிய முதலைமைச்சர் ஸ்டாலின், “ தமிழ்நாட்டில் ஏற்கனவே நிறைவேற்றிய திட்டங்கள் எல்லாம், மக்களிடம் நன்றாக போய் சேர்ந்துள்ளது. இன்னும் மீதமுள்ள ஓராண்டில் என்னென்ன திட்டங்களை கொண்டு வர போகிறோம் என்பதை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிவித்து இருக்கிறோம். இந்த 5 ஆண்டுகால ஆட்சியை சிறப்பாக முடித்து, 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றும் மீண்டும் ஆட்சியை அமைப்போம்.

மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகமாகதான் உள்ளது. எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் நியாயமானதாக இருந்தால் ஏற்றுகொள்வோம். அதுவே, அவதூறு பரப்பும் வகையில் இருந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.” என்று தெரிவித்தார்.

5ம் ஆண்டில் திமுக அரசு:

முன்னதாக 5ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2021ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மக்களுடைய நம்பிக்கையை பெற்று திராவிட முன்னேற்ற கழகம் 6வது முறையாக ஆட்சி அமைத்தது. 2021ம் ஆண்டு மே 7ம் தேதி நான் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டேன். 2025 மே 7ம் தேதி திராவிட மாடல் அரசு 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது.

சாதனைக்கு மேல் சாதனையை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து நிகழ்த்தி கொண்டிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் திட்டம் என்று ஏராளமான திட்டங்களை வரிசைப்படுத்தி சொல்லலாம். இப்படிப்பட்ட திட்டங்களை நீங்கள் மனப்பூர்வமாக பாராட்ட வேண்டும். விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையே விமர்சனங்களால் செதுக்கப்பட்டதுதான். எனவே, தனிப்பட்ட ஸ்டாலினையோ, திராவிட முன்னேற்ற கழக அரசையோ பாராட்ட வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.