கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. விரைந்தது பேரிடர் மீட்புப்படை.. சென்னையில் எப்படி?
Tamil Nadu weather update : தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை, நீலகிரிக்கு 3 மாநில பேரிடர் மீட்பு படை அங்கு விரைந்துள்ளது. மேலும், ஊட்டி வால்பாறைக்கு ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையும் விரைந்துள்ளது. மின்சாரம், தீயணைப்புத்துறை என அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, மே 24 : தமிழகத்தில் இரு தினங்களுக்கு ஒருசில பகுதிகளில் மிக கனமழையும், கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் (Tamilnadu weather update) தெரிவித்துள்ளது. இதில், நீலகிரி மற்றும் கோவை (coimbatore nilgiris red alert) மாவட்டத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை கூட பெய்து வருகிறது. வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், கொங்கு, டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அரபிக் கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.
கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்
அதன்படி, தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும்.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 2025 மே 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 மே 24ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் எப்படி?
2025 மே 25, 26ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
2025 மே 27ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 மே 28, 29ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 மே 24ஆம் தேதியான இன்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதை அடுத்து, பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். மேலும், அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.