வானிலை நிலவரம், ஏப்ரல் 28, 2026: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் 40.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் 40.4 டிகிரி செல்சியஸ், கரூரில் 41 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கொளுத்தும் வெப்பநிலை:
சென்னைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 39.3 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 38.8 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 38.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: அரசுப் பள்ளிகளில் அசுர வேகத்தில் மாணவர் சேர்க்கை.. ஒரே வாரத்தில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை!
வரவிருக்கும் நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வடக்கு தெலுங்கானா முதல் குமரி கடல் வரை, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
கனமழை எச்சரிக்கை எங்கே?
இதன் காரணமாக, ஏப்ரல் 28ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 30ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் மே 1 மற்றும் மே 2ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெப்பநிலை எப்படி இருக்கும்?
மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும், வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையும் ஈரப்பதமும் நிலவும் நிலையில், சில இடங்களில் உஷ்ண அலை (Heat wave) ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
கோடை வெயில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.