பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது? – வெளியான தகவல்
PLus 2 Result : தமிழ்நாடு பாடத்திட்டத்துக்கான பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 27, 2026 அன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6, 2026 இன்று தொடங்கியுள்ள நிலையில் தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 6 : தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற மே 8, 2026 அன்று வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து பொதுத் தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2, 2026 அன்று தொடங்கி மார்ச் 27, 2026 வரையில் நடைபெற்றது இந்த நிலையில் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணியானது ஏப்ரல் 6, 2026 இன்று முதல் தொடங்கியிருக்கிறது. இந்த பணிகள் ஏப்ரல் 20, 2026 வரை மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது?
இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை முதன்மை தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஏப்ரல் 6-ஆம் தேதி மேற்கொள்ள வேண்டும். அவர்கள் அரசுத் தேர்வு இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க வேண்டும்.
இதையும் படிக்க : இந்த 3 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7, 2026 முதல் 20, 2026 தேதிக்குள் உதவி தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை ஏப்ரல் 20. 2026 அன்று வரை முகாம்களில் முடிக்க வேண்டும் எனவும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8. 2026 தேதி வெளியிடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 11, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 2, 2026 அன்றுடன் நிறைவடைந்தது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் 6, 2026 அன்று விருப்பப்பாடத் தேர்வு நடைபெறவுள்ளது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், அரபிக், பிரெஞ்ச் உள்ளிட்ட 9 விருப்ப மொழிப் பாடங்களுக்கான தேர்வில் பங்கேற்க மொத்தம் 4,898 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன என்று அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய சவால்: 3 மொழி கட்டாயம்..!
வருகிற ஏப்ரல் 23, 2026 அன்று தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்குள் பிளஸ் 2 வினாத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இது எதிர்காலத்தை தீர்மானிக்கபோகும் விஷயம் என்பதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர்.