Tamil Nadu News Live: வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை – முதல்வர் ஸ்டாலின்!
Tamil Nadu Breaking News Today 16 August 2025, Live Updates: முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் அதிக வரி விதிக்கப்பட்ட நிலையில் வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

LIVE NEWS & UPDATES
-
ராமநாதபுரத்தில் மூடாமல் இருந்த ரயில்வே கேட்.. ஷாக்கான ஓட்டுநர்!
சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த சேது எக்ஸ்பிரஸ் ராமநாதபுரம் அடுத்த வாலந்தரா ரயில்வே கேட் அருகே சென்றபோது கேட் மூடாமல் இருந்ததை கண்டு ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த குழப்பம் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
-
அன்புமணி ஆசீர்வாதம் வாங்கினாரா? – டாக்டர் ராமதாஸ் சொன்ன பதில்!
நீண்ட நாட்களுக்குப் பின் தைலாபுரம் இல்லத்தில் அன்புமணி – ராமதாஸ் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் அப்பா ராமதாஸிடம் மகன் அன்புமணி ஆசீர்வாதம் வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை. அவர் வணக்கம் என்றார், நானும் பதில் வணக்கம் சொன்னேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பெரியசாமி வீட்டின் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
பழனி எம்எல்ஏ செந்தில்குமாரின் விடுதி அறையில் அமலாக்கத்துறை சோதனை!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் ஐ.பெரியசாமியின் மகனும், பழனி எம்எல்ஏவுமான செந்தில்குமாரின் அறையை திறந்து சோதனை செய்யப்பட்டது. இதற்காக சுமார் 4 மணி நேரம் அதிகாரிகள் காத்திருந்தனர்.
-
சிறப்பு பொதுக்குழு கூட்டம் ரத்தா?.. ராமதாஸ் வெளியிட்ட தகவல்!
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (ஆகஸ்ட் 17) திட்டமிட்டபடி எனது தலைமையில் நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என பாமக நிறுவன ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக வெளியாகியுள்ள வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
வர்த்தக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்திய பொருட்களின் மீதான வரியை அமெரிக்க உயர்த்தியுள்ளது. எனவே மத்திய அரசு வர்த்தக்கத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், அதற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனக் கூறியுள்ளார்.
-
திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா- குவிந்த பக்தர்கள்!
முருகனின் 5ம் படை வீடான திருவள்ளூவர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.
-
பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ரிங் ரோடு அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து பெண் காவலர் பிரசவம் பார்த்த சம்பவம் நடைபெற்றுள்ளது. காவலர் நர்சிங் படித்தவர் என்பதால் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
-
ரயில்வே தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு.. சு.வெங்கடேசன் கண்டனம்!
தென்னக ரயில்வே ஜூனியர் இன்ஜினியர் பதவி உயர்வு தேர்வில், வினாத்தாள் மாநில மொழி உட்பட மூன்று மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் தேர்வு தமிழ் வினாத்தாள் இல்லாமல் நடத்தப்பட்டதற்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 4.06 லட்சம் பேர் பயணம்!
சென்னை மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 4.06 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுதந்திரம், கிருஷ்ண ஜெயந்தி போன்ற தொடர் விடுமுறை வந்துள்ள நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கும் விரைந்து செல்ல மெட்ரோவை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
நாடு வேதங்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
வேதங்கள் மூலமாக நாடு ஒருங்கிணைக்கப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பாரத நாடு மட்டுமே உலகில் அறிவு மற்றும் ஆன்மிகத்தை வேதங்கள் மூலமாக கண்டறிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40ம், கிராமுக்கு ரூ.5ம் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.9,275க்கும், ஒரு சவரன் ரூ. 74,200க்கும் விற்பனையாகிறது. பெரிய அளவில் விலை குறைவு இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
தர்மத்தை நிலைநாட்ட உறுதியேற்போம் – இபிஎஸ் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி அறத்தைப் போற்றி தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம் என அவர் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவு
காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்றும்; ‘கோகுலாஷ்டமி’ என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்த நன்னாளில்,
மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.குழப்பத்தையும்,… pic.twitter.com/oYP4P4uoVd
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 16, 2025
-
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு – திமுகவினர் தர்ணா
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான சென்னை, மதுரை, திண்டுக்கலில் உள்ள இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. திண்டுக்கலில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – குளிக்கத் தடை!
தென்காசி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறை காரணமாக குற்றாலம் வந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
50 ஆண்டுகள் சாதாரணமானது இல்லை.. ரஜினிக்கு முதலமைச்சர் வாழ்த்து!
திரையுலகில் அரை நூற்றாண்டு உச்ச நட்சத்திரமாக நீடிப்பது சாதாரணமானது இல்லை என நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னும் பல்லாண்டு தொடர ரசிகனாக, நண்பனாக வாழ்த்துகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
ஒருதலையாக காதல் – 9ஆம் வகுப்பு மாணவி மீது தாக்குதல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம் சென்னை பழைய பல்லாவரம் பகுதியில் தங்கி பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மாணவியின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்ட நிலையில் தாயார் மறுத்ததால் கத்தியை வைத்து அம்மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
-
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் மக்கள் கூட்டம்!
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வீடுகளிலும் விரதமிருந்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
-
ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் நடைபெற்ற 3,561 முகாம்களில் 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 13.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
அண்ணாசாலை மேம்பால பணி.. போக்குவரத்து மாற்றம்
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
மனைவி மீது சந்தேகம்.. கொலை செய்த கணவர்.. சென்னையில் அதிர்ச்சி!
சென்னை கோட்டூர்புரத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் படிக்க
-
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சட்டவிரோத பணபரிவத்தை தொடர்பான புகாரில் சென்னையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, திண்டுக்கலில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
-
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை.. 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கள்ளிமேடு பத்தரகாளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதி திருவிழா கூட்டம் போல காட்சியளித்தது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் நடைபெற்ற 3,561 முகாம்களில் 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 13.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் போட்டியா? – நடிகை கஸ்தூரி பதில்!
பிரபல நடிகை கஸ்தூரி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தமிழக பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியை வீழ்த்த பாஜக – அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இணைய வேண்டும் என கூறினார். மேலும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியில் இணையவில்லை என கூறியுள்ளார்.
-
திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு – ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்திய திரையுலகம் மற்றும் அரசியல் உலகைச் சார்ந்த பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ரஜினிகாந்தின் திரைப்பயணம் ஒரு சிறப்புமிக்க வெற்றி என கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்ட பதிவு
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது… pic.twitter.com/WUk1nl6Squ
— Narendra Modi (@narendramodi) August 15, 2025
-
6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை: சென்னை வானிலை மையம்!
அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பெரும்பாலும் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் படிக்க
-
இல.கணேசன் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி.. இன்று மாலை இறுதிச்சடங்கு!
உடல்நலக்குறைவால் மறைந்த நாகாலாந்து ஆளுநரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான இல.கணேசன் உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அவரது உடலானது இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த ராமதாஸ் – அன்புமணி!
பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பிரச்னை உச்சத்தை எட்டிய நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி நீண்ட நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். தாயார் சரஸ்வதியின் பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன் அன்புமணி பங்கேற்றார். இதனால் இருவருக்குமிடையே பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Breaking in Tamil Today 16 August 2025 Live Updates: ஆகஸ்ட் 16ம் தேதியான இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு, சுற்றுலாத் தலங்களுக்கு சென்றதால் பெரும்பாலான இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேசமயம் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையே மின்சார ரயில் சேவை 17 ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உடல் நலக்குறைவு காரணமாக தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிற அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி, இரங்கல் தெரிவித்துள்ளனர். அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சைதாப்பேட்டையில் இருந்து பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சமூக விரோதிகளை திமுக பாதுகாப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Published On - Aug 16,2025 7:00 AM