கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..

TVK Vijay Campaign Stampede Karur: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

27 Sep 2025 23:50 PM

 IST

கரூர், செப்டம்பர் 27, 2025: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரத்தில் கூட்டணி நெரிசல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கை:

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முதல்வரின் அறிக்கையில், “ இன்று (27.9,2025) கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன்.

விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும், திருச்சி சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடன் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.