மீண்டும் பரவும் கொரோனா.. தமிழகத்தில் மாஸ்க் கட்டாயமா? சுகாதாரத்துறை விளக்கம்!
Tamil Nadu Covid Cases : கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இதற்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, தமிழக்ததில் முகக் கவசம் கட்டாயம் இல்லை எனவும் இது முற்றிலும் தவறான தகவல் எனவும் கூறியுள்ளது.

கொரோனா தொற்று
சென்னை, மே 23 : தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பரவலை (tamil nadu covid cases) கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார். தெற்கு ஆசிய நாடுகளில் கெரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், தாய்லாந்தில் கொரோனா தொற்று தீயாய் பரவி வருகிறது. அதனின் தாக்கம் இந்தியாவில் எதிரொலித்துள்ளது. அதாவது, இந்தியாவில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேராள, மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் முகக் கவசம் கட்டாயமில்லை
இந்த இரண்டு பேருக்கும் தீராத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்தனர். கேரளாவிலும், ஆந்திராவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்திலும் கொரோனா அதிகரிப்பு காரணமாக, முகக் கவசம் அணிவது கட்டாயம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், இதற்கு பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் முகக் கவசம் அணிவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “பருவக் காலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு லேசாக இருக்கும். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
இதனால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. தமிழகத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை. தமிழக அரசு சார்பில் முகக் கவசம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெயியிடப்படவில்லை. தேவை இருந்தால், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை எடுப்போம்” என்றார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 257 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, மகாராஷ்டிராவில் 56 பேரும், தமிழகத்தில் 34 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 9 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கர்நாடகாவில் 20 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆசிய நாடுகளில் பரவி கொரோனா வகைகள் JN1 LF.7 மற்றும் NB.1.8 வைரஸ்கள் என்று கூறப்படுகிறது. தற்போது பரவும் கொரோனா வகைகளின் தீவிரம் அதிகமாக இல்லை என்று கூறப்படுகிறது. அண்மையில் கூட, இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.