”வறுமை இல்லாத, சமூக வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு, கம்பர் கண்ட கனவு” – முதல்வர் ஸ்டாலின்..
Tamil Nadu CM MK Stalin: கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வறுமையில்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது எனவும் கம்பர் கண்ட கனவு இதுதான் என்றும் பேசியுள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 9,2025: வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது, இதுதான் கம்பர் கண்ட கனவு என சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் விருதை கவிப்பேரரசு வைரமுத்து பெற்றார். அதேபோல் இயற்றமிழ் அறிஞர் என்ற விருதை பேராசிரியர் ஞானசுந்தரம் பெற்றிருந்தார். மேலும் இந்த விழாவில் விருது பெற்று அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
கம்பன் விழாவிற்கும் எனக்கும் என்ன தொடர்பு – முதலமைச்சர் ஸ்டாலின்:
கம்பநாட்டாழ்வாரின் தமிழ்ச் சுவைக்கும் – தமிழ் போற்றும் ‘திராவிட ஆழ்வார்’ திரு. ஜெகத்ரட்சகன் அவர்களது அன்புக்கும் இணங்கி, சென்னை கம்பன் கழகத்தின் பொன் விழா நிறைவு விழாவில் பங்கேற்று விருது பெற்ற ஆன்றோரை வாழ்த்தினேன்!#கம்பன்கழகம்51@Jagathofficial pic.twitter.com/q24nWCIp9e
— M.K.Stalin (@mkstalin) August 8, 2025
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ ஸ்டாலினுக்கும் கம்பன் விழாவிற்கும் என்ன தொடர்பு என்றும் யாரும் வியக்க வேண்டாம். 1999 இல் இதே அரங்கில் நீதி அரசர் எம்.எம் இஸ்மாயில் முன் நின்று நடத்திய கம்பன் விழாவில் கலைஞர் கருணாநிதி பங்கேற்றார். அந்த மேடையில் ஜெகத்ரட்சகனும் இருந்தார்.
அதேபோல் 1969ல் பெரியவர் கணேசன் காரைக்குடியில் நடத்திய கம்பன் விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர் இந்த விழாவிற்கு வந்த என்னை ஆச்சரியத்தோடு பார்க்காதீர்கள் என்னை அழைத்து வந்தவர்களை ஆச்சரியத்தோடு பாருங்கள் என நகைச்சுவையாக பேசினார். நானும் அப்படித்தான் கம்பரின் தமிழுக்காகவும் ஜெகத்ரக்ஷனின் அன்புக்காகவும் இங்கு வந்திருக்கிறேன்.
மேலும் படிக்க: ”கம்யூனிஸ்ட் கட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை” – சி.பி.ஐ.(எம்) மாநில செயலாளர் சண்முகம்
மூன்று நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இது போன்ற விழாக்கள் இலக்கிய சுவையை பேசுவது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறைக்கும் இலக்கியச் சுவையை ஊட்டும் வகையில் அமைய வேண்டும். திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை மாறுபட்ட கோணத்தில் பார்த்த இயக்கம்.
கடவுள்கள் பல இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்:
சில கருத்துக்களுக்காக விமர்சிக்கப்பட்டாலும் கவிதைக்காக அதில் இருக்கும் தமிழுக்காக பாராட்டப்பட்டது. பேரஅறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆன காலத்தில் சென்னை கடற்கரையில் சிவசக்கரவர்த்தி கம்பருக்கு சிலை வைக்கப்பட்டது. வால்மீகி எழுதிய கம்ப ராமாயணத்தை தமிழ் மண்ணின் மனம் மணக்க கம்பர் எழுதியது நமக்கு தெரியும். நதிகள் பலவாக ஓடி வந்தாலும் அது வந்து சேரும் இடம் கடல்தான். அது போல் வேறு வேறு கடவுள்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான் என்ற பொருளில் கம்பர் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
மேலும் படிக்க: மதுபான கடையில் தொடர் கொள்ளை.. காரணம் கேட்டு ஷாக்கான போலீசார்!
வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு – முதலமைச்சர் ஸ்டாலின்:
வண்ணம் இல்லை ஓர் வறுமையின்மையால் என்ற கம்பர் சொன்னார் அப்படி வறுமையில்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்கிறது. இதுதான் கம்பர் கண்ட கனவு இத்தகைய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான்” என பேசியுள்ளார்