சிவகங்கை: வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளைஞர் வெட்டிக்கொலை

Sivaganga Youth Murdered: சிவகங்கை அருகே நண்பர்களுடன் பைக்கில் சென்ற மனோஜ்பிரபு மீது மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரம் மற்றும் குடும்பத் தகராறு பின்னணியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை: வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளைஞர் வெட்டிக்கொலை

இளைஞர் கொலை

Published: 

05 Jul 2025 12:30 PM

சிவகங்கை ஜூலை 05: சிவகங்கை (Sivaganga) அருகே 2025 ஜூலை 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூர சம்பவத்தில், வெளிநாட்டிலிருந்து வந்த மனோஜ்பிரபு (Manoj Prabu) இருசக்கர வாகனத்தில் நண்பர்களுடன் பயணித்தபோது மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் மற்ற இருவர் காயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில், அவரது தங்கை புவனேஸ்வரி மற்றும் அபிமன்யுவை சுற்றிய காதல் விவகாரம் மற்றும் தற்கொலை உள்ளிட்ட பழைய குடும்ப தகராறுகள் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமராக்கி கிராமத்தைச் சேர்ந்த செல்லச்சாமியின் மகன் மனோஜ்பிரபு (29), வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நண்பர்கள் ஹரிகரன் மற்றும் அஜித் குமாருடன் இடையமேலூர் கிராமத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

புதுப்பட்டி அருகே வந்தபோது, ஒரு மர்ம கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நண்பர்களில், மனோஜ்பிரபுவை மட்டும் காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, காரில் தப்பிச் சென்றது.

இந்த கொலையைத் தொடர்ந்து, அவரது நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். மனோஜ்பிரபுவின் உடல் உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2022-ல் நடந்த ஒரு குடும்ப விவாதம் இந்த கொலையின் பின்புலம் என தெரியவந்துள்ளது. மனோஜ்பிரபுவின் சகோதரி புவனேஸ்வரி, பாண்டியின் மகன் அபிமன்யுவை காதலித்து வந்திருந்தார். பின்பு புவனேஸ்வரிக்கு வேறு திருமணம் நடைபெற, அபிமன்யு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால், இரு குடும்பங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டது. இதையடுத்து மனோஜ்பிரபுவும் விசாரணையில் பங்கேற்று பிணையில் வந்திருந்தார்.

தற்போது இந்த பழைய விரோதமே மனோஜ்பிரபு கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தில் தொடர்புடையதாக தமராக்கியைச் சேர்ந்த பாண்டியின் மனைவி பூச்சிப்பிள்ளை, முருகன், மணி, முனீஸ்வரன் மற்றும் முக்கிய சந்தேகத்தராக உள்ள அபிமன்யுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரில் இருந்த மற்ற மர்ம நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முக்கியமான விசாரணை நிலை

மனோஜ்பிரபுவின் கொலை பழைய குடும்ப தகராறின் விளைவாக இருக்கலாம் என்பது போலிஸ் சந்தேகம். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.