அஜித்குமார் தம்பிக்கு வேலை.. இலவச வீட்டு பட்டா.. தமிழக அரசு சார்பில் நிவாரணம்!

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணமாக இலவச வீட்டு மனைப் பட்டா, வேலைவாய்ப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறை மரண வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

அஜித்குமார் தம்பிக்கு  வேலை.. இலவச வீட்டு பட்டா.. தமிழக அரசு சார்பில் நிவாரணம்!

அஜித் குமார்

Updated On: 

02 Jul 2025 12:08 PM

திருப்புவனம், ஜூலை 2: சிவகங்கை மாவட்டம் அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு நிரந்தர அரசு வேலையும், அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கிய நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, சத்திரிய சான்றோர் படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் ஆகியோர் உடனிருந்தனர். இப்படியான நிலையில் இப்படி உதவி செய்வதைக் காட்டிலும் தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தியுள்ளனர்.

நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காவல் மரண வழக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. அங்குள்ள மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் என்ற இளைஞர் காவல் துறை அதிகாரிகளால் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.

கோயிலுக்கு காரில் வந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சிவகாமி மற்றும் நிக்தா என்ற இருவர் காரின் சாவியை காவலாளியான அஜித்குமாரிடம் கொடுத்து பார்க்கிங் செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தரிசனம் செய்து வெளியே வந்த இருவரும் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில் காரில் வைத்திருந்த 10 பவுன் நகை மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலைய போலீசார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அங்கு அவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி போலீசார் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அஜித் குமார் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அஜித்குமாரை சரமாரியாக தாக்கும் வீடியோவும் வெளியானது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஜித் குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என ஹேஸ்டேக் சமூகவலை நிலையங்களில் ட்ரெண்டானது

மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்


அஜித் குமார் உயிரிழந்த வழக்கில் 5 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை 15 வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசை கடுமையாக கேள்விகளால் துளைத்தெடுத்தது.

ஒரு குடிமகனை அரசே கொன்றுவிட்டது, இதற்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் அஜித்குமார் குடும்பத்திடம் பேசி நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உள்ளிட்டோர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அஜித் குமார் மரணத்தில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்கள் யார் என்ற உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.