ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு.. அடுத்த டிஜிபி யார்?
Shankar Jiwal Retirement: தமிழகத்தின் டிஜிபியாக இருக்கும் சங்கர் ஜிவால் வரும் 31, ஆகஸ்ட் 2025 அன்று ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், சங்கர் ஜிவால் தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட “தீ ஆணையத்தின் தலைவராக” நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 19, 2025: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்து வரும் சங்கர் ஜிவால், 2025 ஆகஸ்ட் 31 ஆம் தேதி (நாளை மறுநாள்) ஓய்வு பெறுகிறார். இதனை முன்னிட்டு, சென்னை எக்மோரில் 2025 ஆகஸ்ட் 29 ஆம் தேதி (இன்று) பிரிவு உபசார நிகழ்வு நடைபெற்றது. சங்கர் ஜீவால் ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட “தீ ஆணையத்தின் தலைவராக” அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
யார் இந்த சங்கர் ஜிவால்?
சங்கர் ஜீவால் 2023 ஆம் ஆண்டு தமிழகத்தின் டிஜிபியாக பணியமர்த்தப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், டெல்லியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக சேர்ந்தார். தமிழகத்தில் இதுவரை பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய காலத்தில், அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவர் புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார்.
மேலும் படிக்க: வெண்டிலேட்டர் சிகிச்சையில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் சொன்னது என்ன?
புதிய பொறுப்பு டிஜிபி:
இந்நிலையில், அவர் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது 2025 ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். இதையடுத்து, அடுத்த டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது, புதிய பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜி. வெங்கட்ராமன், 1994 ஆம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக சேர்ந்தவர். அவர் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது, நிர்வாகத் துறை டிஜிபியாக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2025 ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளிநாடு செல்ல உள்ள நிலையில், புதிய டிஜிபி குறித்த அறிவிப்பு அதற்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்.. அஸ்தியை கரைப்பது போல் கிடக்கிறது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
அடுத்த டிஜிபியாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற பட்டியலில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான சந்தீப்ராய் ரத்தூர், சீமா அகர்வால், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சந்தீப்ராய் ரத்தூர் தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாகவும், சீமா அகர்வால் தீயணைப்பு துறை இயக்குநராகவும், வெங்கட்ராமன் நிர்வாகப் பிரிவு டிஜிபியாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.