Madurai: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!
Madurai Sanitation Workers Protest: மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்வது, கொரோனா ஊக்கத்தொகை வழங்குவது, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, அவர்கள் இரவில் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மதுரை, ஆகஸ்ட் 19: மதுரையில் (Madurai) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் (Sanitation Workers) இரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025, ஆகஸ்ட் 1 ஆம் தேதி பணி நிரந்தரம் மற்றும் தனியாருக்கு டெண்டர் விடுவதை ரத்து செய்யக் கோரி சென்னையில் உள்ள பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு ஆயிரத்துக்கு மேற்பட்ட இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்ட நிகழ்வானது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. பல தரப்பினரும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியில் முடிவடைந்தது. இதுதொடர்பான வழக்கில் பொது இடங்களில் போராட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதனையடுத்து தூய்மை பணியாளர்களை கலைந்து போக சொல்லி காவல்துறையினர் தெரிவித்த நிலையில் கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவர்கள் உறுதியாக இருந்தனர். இப்படியான நிலையில் 2025, ஆகஸ்ட் 13 இரவு தொடங்கி ஆகஸ்ட் 14 அதிகாலை வரை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஒருநாள் சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு விடுவிடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் கண்டனத்திற்குரிய ஒன்றாக மாறியது.
Also Read: தூய்மை பணியாளர்கள் குரல் முதல்வருக்கு கேட்கவில்லையா..? நயினார் நாகேந்திரன் கேள்வி!
இதேபோல் கடலூர், மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் தூய்மை பணியாளர்கள் சம்பள பாக்கி, தனியார் டெண்டர் ரத்து, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை தூய்மை பணியாளர்கள் கைது
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2025 ஆகஸ்ட் 18ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த போராட்டம் மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன.
Also Read: தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்கள்.. என்னென்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று நடந்த மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இப்படியான சூழலில் நேற்று (ஆகஸ்ட் 18) இரவு தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.