மதுபோதையில் விபத்து.. நடுரோட்டில் காவலர் தீக்குளித்து தற்கொலை
சென்னை கிண்டி மடுவின்கரை மேம்பாலத்தில் கார் விபத்தில் ஈடுபட்ட தரமணி தலைமை காவலர் செந்தில், விசாரணைக்கு ஆஜராக தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, மே 21: சென்னை (Chennai) கிண்டி ரயில் நிலையம் அருகே இருக்கும் மடுவின்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை (Suicide) செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் செந்தில் என்ற தலைமை காவலர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருடைய சொந்த ஊர் நாகப்பட்டினமாகும். செந்தில் தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் 2025 மே 20ம் தேதி மாலையில் சென்னை கிண்டி அருகே இருக்கும் மடுவின்கரை மேம்பாலத்தில் காரில் சென்றுள்ளார். குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் செந்தில் காரை தாறுமாறாக ஓட்டி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்தி விட்டு எஸ்கேப்
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பலத்த காயமடைந்தார். மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை சக வாகன ஓட்டிகள் துரத்தி சென்று கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகே மடக்கி பிடித்தனர்.
கார் மோதிய வேகத்தில் முருகேசனுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அழைப்பு – தற்கொலை
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் விபத்தை ஏற்படுத்திய தரமணி தலைமை காவலர் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பாக பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் செந்தில் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ குழுவினர் அவர் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ததாக சொல்லப்பட்ட நிலையில் நேற்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பெற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளனர். தொடர்ந்து இன்று (மே 21) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் அறிவுறுத்திய நிலையில் செந்தில் வழக்கம் போல பணிக்கு வந்துள்ளார். பின்னர் கிண்டிக்கு செல்வதாக கூறி புறப்பட்ட அவர், 11 மணியளவில் தரமணி ரயில் நிலையம் அருகே சென்று தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை உறிஞ்சி எடுத்து தன் மீது ஊற்றி திடீரென தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டும், தீக்குளித்ததை நேரில் பார்த்த மக்களும் அப்பகுதியில் இருந்து சிதறி ஓடினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் செந்தில் மீதான தீயை அணைத்து அவரை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)