கட்சிக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை.. தனிக்கட்சியை தொடங்கலாம்.. மீண்டும் பாமக நிறுவனர் திட்டவட்டம்..
Ramadoss vs Anbumani: என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமெனில், அவர் ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி தொடங்கலாம். இதுவரை எட்டு மாதங்களில் மூன்று முறை நான் தனிக் கட்சி தொடங்குமாறு சொல்லியுள்ளேன் என ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
விழுப்புரம், அக்டோபர் 17, 2025: அன்புமணிக்கு தலைமைத் தன்மை இல்லை; அவர் தனி கட்சி ஆரம்பிப்பது தான் நல்லது என மீண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில் மகன் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே பல மாதங்களாக மோதல் நிலை நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியாக கட்சியின் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்குமா என பலரும் எதிர்பார்த்தாலும், இருவருக்கும் இடையிலான விரிசல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருவருமே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனித்தனியாக பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தினர். ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிக்க, அதேபோல அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்கி புதிய நிர்வாகிகளை சேர்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புமணிக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது – ராமதாஸ்:
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் பாமக இரண்டு அணிகளாக செயல்படுவது, தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாமகவிற்கும் அன்புமணிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அவர் தனிக் கட்சி தொடங்குவது தான் நல்லது. நான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். ஒரு நாள் கழித்து மீண்டும் வீடு திரும்பினேன். தமிழகத்தில் இருந்த அனைத்து கட்சித் தலைவர்களும் நலம் விசாரித்தனர்; ஆனால் புதிதாக ஆரம்பித்த கட்சி மட்டும் நலம் விசாரிக்கவில்லை,” என்றார்.
மேலும் படிக்க: அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெளுக்கப்போகும் மழை.. பிரதீப் ஜான்
அன்புமணிக்கு தலைமை பண்பு கிடையாது:
மேலும், “நான் மருத்துவமனையில் இருந்தபோது, ‘அன்புமணிக்கு எனக்கு ஏதாவது நடந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன்; வேடிக்கை பார்க்க மாட்டேன்’ என்று பேசியுள்ளார். படிக்காத மாடு மேய்க்கும் சிறுவனும் இப்படி சொற்களை பேச மாட்டான். அதனால் தான் அன்புமணிக்கு தலைமைப் பண்பு கிடையாது என நிர்வாகக் குழுவில் நான் கூறியிருந்தேன். நான் நோய் தொற்றும் அளவுக்கு பாதிக்கப்படவில்லை,” என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர், “அன்புமணியுடன் இருப்பவர்கள் கட்சி உறுப்பினர்களோ நிர்வாகிகளோ அல்ல; அது ஒரு கும்பல். அந்த கும்பலுக்கு சில நாட்கள் அவர் தலைவராக இருப்பார். பாமகவை தோற்றுவித்து அதன் உரிமையாளர் நான்தான். இப்போது அதே கட்சி மற்றும் அதே கொடியைக் கொண்டு தன்னுடைய கட்சி என்று கூறுவது நியாயமில்லை. இதைப் பற்றி தேர்தல் ஆணையத்தில், கோர்ட்டில் சந்திப்போம்,” என்றார்.
மேலும் படிக்க: வந்தாச்சு தீபாவளி.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு..
தனிக்கட்சி தொடங்கலாம் – அதுதான் நல்லது:
இறுதியாக அவர், “என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமெனில், அவர் ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி தொடங்கலாம். இதுவரை எட்டு மாதங்களில் மூன்று முறை நான் தனிக் கட்சி தொடங்குமாறு சொல்லியுள்ளேன். இனிமேல் என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது; இனிஷியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்,” என மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.