ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி.. பயணத்திட்டம் என்ன?
PM Modi Visit To Tamil Nadu: பிரதமர் மோடி 2025, ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். இதில் முக்கியமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து அங்கிருந்து மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நேரலையில் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 2025 ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த நிலையில் மீண்டும் அடுத்த மாதம் கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக 15 ஆண்டுகள் கழித்து நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் நுழைந்தது. அதனைத் தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வலுவாக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு, அதற்கான பணிகளும் தமிழக பாஜக தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் – பாஜக பிளான் என்ன?
இந்த நிலையில் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி நெல்லையில் பாஜகவின் மாநில மாநாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2026 ஜனவரி மாதம் வரை மாவட்டம் தோறும் மாநில மாநாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி பாஜகவின் அரசியல் நகர்வுகள் ஆயத்தமாக இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். 2025 ஜூலை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்திருந்தபோது பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் தூத்துக்குடி அரியலூர் பயணம்:
குறிப்பாக தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி விமான நிலைய விரிவாக்க விழாவில் கலந்து கொண்டார். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையங்களில் ரூபாய் 548 கோடி மதிப்பில் மூன்றாம் மட்டும் நான்காம் அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின் பரிமாற்ற அமைப்புக்கு அடிக்கல் நாட்டினார்.




மேலும் படிக்க: ‘அண்ணா வழியில் செல்வோம்.. இனி மக்களுடன் தான் வாழ்க்கை’ தவெக தலைவர் விஜய் பேச்சு
அதனைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவின்போது ராஜ ராஜ சோழனின் சிறப்பு நாணயத்தையும் வெளியிட்டார். அதேபோல் சின்மயா மிஷன் சார்பில் தமிழில் பகவத் கீதை இசைத்தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மன்கி பாத் நிகழ்ச்சி?
இந்நிலையில் 2025 ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அதிலும் முக்கியமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து மன்கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடக்க இன்னும் எட்டு மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது