சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை… மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகாரட்சி
Pitbull, Rottweiler dogs banned in Chennai: ஏற்கெனவே, சென்னையில் செல்லப் பிராணி வைத்திருப்பவர்கள் அதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உரிமம் பெறாத செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ரூ,5000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.

பிட்புல், ராட்வீலர்
சென்னை, டிசம்பர் 19: சென்னையில் பிட்புல் (pitbull) மற்றும் ராட்வீலர் (rottweiler) இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் அத்தகைய இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
சென்னை மாமன்ற கூட்டத்தில் முடிவு:
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் வாக்காளர் திருத்த சிறப்பு பணிகளுக்காக கடந்த மாதம் நடைபெறவில்லை. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 19) சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ஓய்வறைகள் 200 வார்டுகளிலும் ஏற்படுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிட்புல், ராட்வீலர் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்:
இந்நிலையில் சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் (டிச. 20) தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை (Leashing) மற்றும் வாய்க்கவசம் (Muzzling) அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நாய்கள்:
பிட்புல், ராட்வீலர் வகை நாய்கள் மனிதர்களை தாக்குவது மட்டுமின்றி, இறப்பையும் ஏற்படுத்துவதால் கடந்த மார்ச் 12 ஆம் தேதி அதனை தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஏற்கெனவ, வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் இவ்வகை நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறு பரிந்துரைத்திருந்தது.
மேலும் படிக்க: தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்? அதன் நிலைப்பாடு என்ன!
நாய்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயம்:
ஏற்கெனவே, உரிமம் இல்லாமல் வளர்க்கப்படும் நாய்களுக்கு கடந்த டிசம்பர் 15, 2025 தேதி முதல், ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பலமுறை அவகாசம் வழங்கியும் சென்னையில் இதுவரை 57,062 நாய்களுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.