நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் – மிக கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Rain Alert : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அக்டோபர் 27, 2025 அன்று மோன்தா புயலாக உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து இது அக்டோபர் 27, 2025 அன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாகவும் வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலுக்கு மோன்தா (Montha) என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் குறிப்பாக வடக்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான (Heavy Rain) எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
தமிழகத்தில் மோன்தா புயல் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 27, 2025 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்ட ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 11.5 செ.மீ முதல் அதிகபட்சமாக 20.4 செ.மீ வரை மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க : சென்னையை நோக்கி நகரும் மோன்தா புயல்.. மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்..
மேலும், அதே போல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 26, 2025 இன்று கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 27, 2025 மறுநாள் காலை தீவிர புயலாக தீவிரமடையக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 28, 2025 அன்று மாலை ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்றும் அந்த நேரத்தில், சென்னை கடற்கரை பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 3 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இந்நிலையில், மோன்தா புயல் காரணமாக, புதுச்சேரியில் உள்ள ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 27, 2025 முதல் அக்டோபர் 29, 2025 வரை 3 நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டிலும் கனமழை காரணமாக விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.