கோவில் வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த 300க்கும் மேற்பட்ட வாக்காளர் படிவங்கள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்..
Namakkal: இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோயிலில் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய கணக்கெடுப்பு படிவங்கள் கேட்பாரற்று கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குமாரமங்கலம் நாடார் தெருவில் உள்ள செல்வவிநாயகர் கோயில் வளாகத்தில், திருச்செங்கோடு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 77 பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய கிட்டத்தட்ட 300 படிவங்கள் சிதறிக் கிடந்தன.

கோப்பு புகைப்படம்
நாமக்கல், நவம்பர் 16,2025: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கோயில் வளாகத்தில் கேட்பாரற்று சுமார் 300 படிவங்கள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, யாரோ வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட நபர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மட்டுமல்லாமல் 12 மாநிலங்களிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில், இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அவசர அவசரமாக இந்த திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கான காலம் தகுதியற்றது என்றும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
கோவில் வளாகத்தில் கிடந்த 300 வாக்காளர் படிவங்கள்:
அதேபோல், இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளதாக அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோயிலில் வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய கணக்கெடுப்பு படிவங்கள் கேட்பாரற்று கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குமாரமங்கலம் நாடார் தெருவில் உள்ள செல்வவிநாயகர் கோயில் வளாகத்தில், திருச்செங்கோடு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 77 பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய கிட்டத்தட்ட 300 படிவங்கள் சிதறிக் கிடந்தன.
மேலும் படிக்க: முட்டை விலை இதுவரை காணாத புதிய உச்சம் – 50 ஆண்டுகால வரலாற்றில் இதுவே அதிகம் – காரணம் என்ன?
வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை:
இந்த படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படாத நிலையில், யார் இவற்றை இங்கே வைத்துச் சென்றிருக்கலாம் என ஆய்வு செய்தபோது, படிவங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரான வனிதாவின் பெயர் இருந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும், எழுச்சிப்பாளையம் வருவாய் ஆய்வாளர் கண்ணன் மற்றும் கவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுபதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது படிவங்கள் எப்படி இங்கு வந்தது, யார் இதனை விட்டுச் சென்றனர் என்பதற்கான விசாரணையில் வனிதாவின் பெயர் வெளிவந்தது.
மேலும் படிக்க: சென்னையில் இன்று முதல் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம் – எங்கிருந்து எங்கே?
பின்னர் வனிதாவை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டபோது, திருச்செங்கோடு உதவி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், இந்த படிவங்களை வேறு ஒருவரிடம் பத்திரமாக ஒப்படைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதனை யாரோ வேண்டுமென்றே பையிலிருந்து எடுத்து இங்கே போட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் கோயிலில் கிடந்த 300க்கும் மேற்பட்ட படிவங்களை வனிதா சேகரித்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு வழங்க வேண்டிய முக்கியமான படிவங்கள் இவ்வாறு கவனக்குறைவாக கைவிடப்பட்டுள்ளதற்காக மக்கள் மத்தியில் பெரும் கவலை நிலவுகிறது.