சுட்டெரிக்கும் சூரியன்.. 100 டிகிரி கடந்து பதிவான வெயில்.. இனி இப்படி தான் இருக்குமா?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை இருந்தாலும், வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், செப்டம்பர் 26, 2025: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், 2025 செப்டம்பர் 26 ஆம் தேதி (இன்று) கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி (நாளை) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தாலும், பிற மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. அதேபோல், 2025 அக்டோபர் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை தொடரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காலை உணவு திட்டம்… மாணவர்களின் உடல்நிலை பாதிப்பு 70% குறைவு – முதல்வருக்கு மருத்துவர் அருண் குமார் நன்றி
குறையும் மழை – அதிகரிக்கும் வெப்பநிலை:
கடந்த வாரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியிருந்தது. ஆனால் தற்போது மழையின் அளவு படிப்படியாக குறைந்து, சில மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்யக்கூடிய நிலையில், வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெயில்:
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 37.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 36.7 டிகிரி செல்சியஸ், தோண்டையில் 35 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 36.3 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடியில் 35.3 டிகிரி செல்சியஸ், கடலூரில் 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல்… தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் – யார் தெரியுமா?
சென்னையைப் பொருத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 36.2 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், கரூரில் அதிகபட்சமாக 3.5 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக, மொத்தம் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், மிதமான மழை இருந்தாலும் நகரின் சில பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான அல்லது குறுகிய நேர மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.