அடுத்தடுத்து சம்பவம்.. விருதுநகரில் சிக்கிய போதை மாத்திரைகள்? தென்காசியை சேர்ந்தவர் அதிரடி கைது!
Virudhunagar Narcotic Pills Seized : விருதுநகர் மாவட்டத்தில் போதை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகள் மற்றும் சிரஞ்ச் வைத்திருந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன .
விருதுநகர் மாவட்டம், நத்தம் பட்டி சுங்கச்சாவடி அருகே சம்பவத்தன்று போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மூவேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் முன்னுக்கு பின் முரணான பதில்களை போலீசாரிடம் தெரிவித்தார். இதனால், அவர் மீது மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பதும், இவர் இன்ஜினியரிங் பட்டதாரி என்பதும் தெரியவந்தது.
மருத்துவர் பரிந்துரை இல்லாத மாத்திரைகள்
அத்துடன், அவரிடம் இருந்த உடைமைகளை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். இதில், போதை தரக்கூடிய 16 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஒரு சிரஞ்ச் ஆகியவை இருந்தது. இதை பார்த்த போலீசார் இதற்கான மருத்துவரின் பரிந்துரை சீட்டு உள்ளனவா என்று முகமதுவிடம் போலீசார் கேட்டனர். ஆனால், அவரிடம் அது போன்ற மருத்துவர் பரிந்துரை சீட்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் முகமதுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. இரு காவலர்கள் பணியிட மாற்றம்.. நாகை காவல்துறையில் பரபரப்பு!




மாத்திரைகள் மற்றும் சிரஞ்ச் பறிமுதல்
இதில், அவர் போதை தருவதற்காக இந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அத்துடன், வேறு யாராவது போதை மாத்திரை கேட்டால் இந்த வலி நிவாரண மாத்திரைகளை விற்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் இருந்து 16 வலி நிவாரணம் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் மீது போதைப் பொருட்கள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் 600 மாத்திரைகள் பறிமுதல்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல, திருநெல்வேலி தாலுகாவில் போதை மாத்திரைகள் விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஒரு சிறுவன் உட்பட சென்னையை சேர்ந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை தரக்கூடிய 600 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள்கள்.. திருநெல்வேலியில் 600 மாத்திரைகள் பறிமுதல்.. 4 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!