திருச்செந்தூரில் முறைகேடான டிக்கெட் விற்பனை.. நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

Tiruchedur Ticket Sale Issue: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சட்ட விரோதமாக டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை தொடர்ந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது இது தொடர்பாக இந்து சமய அறநிலை துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

திருச்செந்தூரில் முறைகேடான டிக்கெட் விற்பனை.. நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

கோப்பு புகைப்படம்

Published: 

29 Aug 2025 21:41 PM

மதுரை, ஆகஸ்ட் 29, 2025: ஆறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலைத்துறையும் காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சண்முகராஜன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.100 வசூலிக்கிறது, மேலும் அந்த டிக்கெட்டுகள் இணையதளம் வழியாக பெறக்கூடியவையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 2025 ஜூலை 26 ஆம் தேதி கோவிலுக்கு சென்றபோது, பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கான வழிகள் முறைப்படுத்தப்படவில்லை. ஆன்லைன் வழியாக டிக்கெட் வாங்காமல், சிலர் அங்கீகரிக்கப்படாத வழிகளில் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்தனர். இதனால் முறையாக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சிரமத்திற்கு ஆளானனர்.

மேலும் படிக்க: ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு.. அடுத்த டிஜிபி யார்?

திருச்செந்தூரில் தரிசன டிக்கெட் முறைகேடுகள்:

மேலும், கோவிலால் அங்கீகரிக்கப்படாத நபர்கள், பூசாரிகளின் பெயரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பண மோசடி செய்து வருகின்றனர். இதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை, 2025 ஆகஸ்ட் 29 ஆம் தேதி இன்று, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் அமர்வில் நடைபெற்றது. அரசு தரப்பில், கோவிலின் திரிஹரசுந்தரர்கள் மட்டுமே தரிசன டிக்கெட் விற்பனை செய்கிறார்கள், மேலும் இதுகுறித்து தகவல் பலகைகள் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்.. அஸ்தியை கரைப்பது போல் கிடக்கிறது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு:

இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள், “கோவிலுக்கு வருவது நிம்மதியை தேடி தான்; அங்கு சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று குறிப்பிட்டனர். மேலும், தூத்துக்குடி எஸ்பியையும் வழக்கில் இணைக்க உத்தரவிட்டனர். கோவிலில் பாதுகாப்பிற்காக கூடுதல் காவலர்களை பணியமர்த்தவும் உத்தரவிட்டனர். இதுபோன்ற முறைகேடான டிக்கெட் விற்பனையைத் தடுக்க, இந்து சமய அறநிலைத்துறையும் காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.