ஈரோடு அருகே சோகம்.. காதல் தம்பதியினர் கிணற்றில் குதித்து தற்கொலை
ஈரோடு மாவட்டம் அருகே காதல் திருமணம் செய்த சந்திரன், பிரியதர்ஷினி தம்பதியினர் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். குடும்பத் தகராறே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. இரவு வாக்குவாதத்திற்குப் பின், பிரியதர்ஷினி கிணற்றில் குதித்ததாகவும், அவரை காப்பாற்றச் சென்ற சந்திரனும் உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் (Erode) அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியினர் கிணற்றில் குதித்து தற்கொலை (Suicide) செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுக்கொத்துக்காடு என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவரின் மகன் சந்திரன் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சத்தியமங்கலத்தை அடுத்து இருக்கும் இண்டியம்பாளையம் சின்ன கரடு என்ற பகுதியைச் சேர்ந்த ராக்கிமுத்து என்பவரின் மகள் பிரியதர்ஷினிக்கும் காதல் இருந்து வந்தது. இவர்கள் இருவரும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து புதுக்கொத்துக்காடு பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் இரண்டு பேரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
இதற்கிடையில் இந்த தம்பதியினர் சின்ன கரடில் இருக்கும் பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அரசூர் குள்ளம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தம்பதியினர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்த நிலையில் சிறிது நேரத்தில் தூங்குவதற்கும் சென்று விட்டனர்.
திருவிழாவுக்கு சென்ற இடத்தில் சோகம்
இப்படியான நிலையில் 2025, மே 8 ஆம் தேதி அதிகாலையில் சந்திரன் மற்றும் பிரியதர்ஷினி அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அதிகாலையில் அந்த வழியாக சென்ற மக்கள் இருவரது உடல்கள் கிணற்றில் கிடப்பதை கண்டு உடனடியாக கடத்தூர் போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து இருவரின் உடல்களும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் சந்திரனுக்கும் பிரியதர்ஷினிக்கும் இடையே குடும்பம் நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சோக நிகழ்வு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது இரவு நேரத்தில் சந்திரனும் பிரியதர்ஷனும் சண்டை போட்ட பிறகு குடும்பத்தினர் அவர்களை சமாதானம் செய்து தூங்க செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பிரியதர்ஷினி இரவு நேரம் என்றும் பாராமல் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிக்கொண்டு சென்றிருக்கிறார். அதனை தடுப்பதற்காக சந்திரனும் பின்னால் சென்றுள்ளார் .
நீச்சல் தெரியாமல் பிரியதர்ஷினி கிணத்தில் கிணற்றில் முதலில் குதிக்க அவரைக் காப்பாற்றத்துக்காக சென்ற சந்திரனும் உள்ளே விழுந்து நீச்சல் தெரியாமல் மூச்சு திணறி இறந்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உண்மையாக காரணம் என்னவென்று தெரியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை எதற்கும் தீர்வல்ல. ஏதேனும் பிரச்னையால் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)