சேலம்: கருணாநிதி சிலை மீது பெயிண்ட் வீசியது யார்? எந்த நோக்கத்தில் நடந்தது?

Salem Karunanidhi Statue Vandalized: சேலம் அண்ணா பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மீது மர்ம நபர்கள் கருப்பு பெயிண்ட் வீசியுள்ளனர். இச்சம்பவம் திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்: கருணாநிதி சிலை மீது பெயிண்ட் வீசியது யார்? எந்த நோக்கத்தில் நடந்தது?

கருணாநிதி சிலை

Published: 

15 Jul 2025 10:26 AM

சேலம் ஜூலை 15: சேலம் அண்ணா பூங்காவில் (Salem Anna Park) வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் (Former Chief Minister Karunanidhi)  16 அடி உயர வெண்கல சிலை (16-foot tall bronze statue) மீது மர்ம நபர்கள் கருப்பு பெயிண்ட் ஊற்றி அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலை மீது பெயிண்ட் வீசியதற்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அனுமதி இன்றி சிலை நிறுவப்பட்ட விவகாரமும், திமுக கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரமும் நடந்திருந்தது. இது திட்டமிட்ட அரசியல் பின்னணியுடன் உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களை கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு

சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பாக வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் தந்தை என புகழப்படும் மு.கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல உருவச் சிலையின் மார்பு மற்றும் கால்கள் பகுதிகளில் மர்ம நபர்கள் கருப்பு பெயிண்ட் ஊற்றிய சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.75 லட்சம் செலவில், 1,817 சதுரடி பரப்பளவில், 4 அடி உயர பீடத்துடன் அமைக்கப்பட்ட இந்த சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022-ஆம் ஆண்டு திறந்து வைத்தார். சிலை மீது பெயிண்ட் வீசப்பட்டது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக கொடி கம்பமும் அகற்றம்

இவ்விவகாரம் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது ஒரு திட்டமிட்ட அவமதிப்பு செயல் என கருதப்படுகின்றது. ஏற்கனவே, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அனுமதி இன்றி கருணாநிதி சிலை ஒன்று வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததுடன், அந்த பகுதியில் இருந்த திமுக கொடி கம்பமும் அகற்றப்பட்டிருந்தது. இவை அனைத்தும் தொடர்ச்சியான நிகழ்வுகளாக கருதப்பட்டு, சம்பவத்திற்கு பின்னால் உள்ள நோக்கம் குறித்து விசாரணை பல்கோணங்களில் நடைபெற்று வருகிறது.

Also Read: விஜய் தலைமையில் நடந்த போராட்டம்.. தவெகவினர் மீது வழக்குப்பதிவு.

கருணாநிதி சிலை அவமதிப்பு சம்பவம் அரசியல் பின்னணியுடன் கூடியதா?

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் சூழ்நிலை சூடுபிடித்துள்ள நிலையில், கருணாநிதி சிலை அவமதிப்பு சம்பவம் அரசியல் பின்னணியுடன் கூடியதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. திமுக தொண்டர்கள் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

சிலை மீது பெயிண்ட் வீசியது யார்? எந்த நோக்கத்தில் இது நடந்தது? என்பதற்கான விடை விரைவில் வெளியாகும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்து, பொதுமக்கள் குழப்பமின்றி இயல்பு நிலையை பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.