Madurai Aadheenam Car Accident: சென்னை நெடுஞ்சாலையில் கார் விபத்து.. மதுரை ஆதினத்தை கொலை செய்ய முயற்சியா? காவல்துறையினர் விளக்கம்!
Kallakurichi Car Accident: கள்ளக்குறிச்சி அருகே கார் விபத்தில் சிக்கிய மதுரை ஆதீனம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கொலை முயற்சி நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். காவல்துறையோ இது எதிர்பாராத விபத்து எனக் கூறி, சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டது. ஆனால், போலீஸ் விசாரணை தொடர்கிறது. விபத்தில் சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டது. ஆனால், ஆதினத்தின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி, மே 5: கள்ளக்குறிச்சியை (Kallakurichi) அடுத்த சென்னை – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கி நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மதுரை ஆதீனம் (Madurai Aadheenam), தன்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்கு கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சார்பில் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து என்றும், இதில் சதி எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் (Kallakurichi Police) வெளியிட்டனர். இந்தநிலையில், என்ன நடந்தது உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்துகொள்வோம்.
நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மதுரை ஆதீனம்:
சென்னை பொத்தேரியில் உள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் திருக்கயிலாய பரம்பரை தர்மபுரம் ஆதீனத்தின் சர்வதேச சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் SRM பல்கலைக்கழகம் இணைந்து 6வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டை கடந்த 2025 மே 3ம் தேதி நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பங்கேற்றார். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நேற்று அதாவது 2025 மே 3ம் தேதி கார் விபத்தில் தன்னை கொலை செய்ய சதி திட்டம் நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
காவல்துறையினர் விளக்கம்:
இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் அளித்த விளக்கத்தில், விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவு காட்சிகளை ஆராய்ந்தபோது மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்றதே, இந்த விபத்திற்கு காரணம் என்றும், இது விபத்து தொடர்பாக மதுரை ஆதீனமோ, அவருடன் இருந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எந்த காவல்நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை. விபத்து குறித்து பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது.
என்ன நடந்தது..?
#MaduraiAdheenamMurderAttempt#VHPNTN#IslamicFundamentalism
மதுரை ஆதீனம் மீது நடத்தப்பட்ட கொலை தாக்குதல் முயற்சி! pic.twitter.com/uF4t7FWCu6
— விஸ்வ ஹிந்து பரிஷத் – வட தமிழ் நாடு – VHP North TN (@vhptn1) May 4, 2025
சென்னையை நோக்கி மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக, அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக ரவுண்டானா அருகே சென்றது. அப்போது சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற மற்றொரு காருடன், மதுரை ஆதினம் பயணித்த காரும் மோதியது. இந்த எதிர்பாராத மோதலில் மதுரை ஆதினம் பயணித்த காரின் பின்புறத்திலும், மற்றொரு காரின் முன்புறத்திலும் சிறிய அளவிலான சேதம் உண்டானது. இதையடுத்து, இரு தரப்பினரை சேர்ந்தவர்களும் சுமார் 10 நிமிடம் வாக்குவாதம் செய்தபிறகு, அந்த இடத்தில் இருந்து கிளம்பி சென்றனர்.