சென்னைக்கு 720 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல்.. புதிய அப்டேட்!
Montha Cyclone: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும் என்றும் முன்னறிவித்துள்ளது. இதையொட்டி, நாளை காலை முதல் சென்னையில் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மோன்தா புயல்
மோன்தா புயல் – அக்டோபர் 26, 2025: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும் என்றும் முன்னறிவித்துள்ளது. மேலும், இந்த புயல் எந்த வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..
இதையொட்டி, தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்ட ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 11.5 செ.மீ முதல் அதிகபட்சமாக 20.4 செ.மீ வரை மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அந்தவகையில், சென்னைக்கு 720 கிமீ கிழக்கு தென்கிழக்கிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு 790 கிமீ தெற்கு தென்கிழக்கிலும், காக்கிநாடாவிற்கு 780 கிமீ தென்கிழக்கிலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மையம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதோடு, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.
தொடர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுவடையும் என்றும், 28 அக்டோபர் 2025 அன்று இது தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா கடலோர பகுதிகள் மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே அன்று இரவு கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நெருங்கும் பீகார் சட்டமன்ற தேர்தல்.. பாஜகவிற்கு 101 இடங்கள்.. நிறைவடைந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..
நாளை காலை சென்னையில் மழை பெய்யும்:
மேலும், புயல் காரணமாக 29 அக்டோபர் 2025 வரை, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்திலும், சில சமயங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே, நாளை காலை முதல் சென்னையில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதனால், நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பதும் காலை பெய்யும் மழை அளவு பொருத்தே முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.