மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்.. கோவையில் பயங்கரம்!!
கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தால் மனைவியை கொன்ற கணவம், “துரோகத்தின் சம்பளம் மரணம்” என வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் வரை சடலத்துடன் கால் மேல் கால் போட்டு அவர் கூலாக அமர்ந்திருந்துள்ளார்.

மனைவியின் சடலத்துடன் செல்ஃபி எடுத்த பாலமுருகன்
கோவை, டிசம்பர் 01: கோவை அருகே கள்ளக்காதல் விவகாரம் காரணமாக மனைவியை கொலை செய்த கணவன், சடலத்துடன் போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியை சேர்ந்த சிவன்பாண்டி என்பவரது மகன் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா (30) என்பவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, ஸ்ரீபிரியாவிற்கும், அவரது கணவர் பாலமுருகனுக்கும் இடையே சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், சிறு சிறு விஷயங்களுக்கும் தம்பதியினர் கடுமையாக சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : கள்ளக்காதலுக்கு தடையாக மாறிய கணவன்.. காதலனுடன் இணைந்து கொலை செய்த மனைவி!
கணவரை பிரிந்தவருக்கு, வேறு ஒருவருடன் தொடர்பு:
இதன் காரணமாக கணவரை பிரிந்த பிரியா, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு காந்திரத்தில் இருக்கும் மகளிர் விடுதியில் தங்கி அவர் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, பாலமுருகனின் உறவினருடன் பிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாகவும் மாறியுள்ளது. இதனால், இருவரும் நெருங்கியும் பழகி வந்துள்ளனர். அதோடு, இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளியில் சென்று வருவதும், ஒன்றாக புகைப்படம் எடுப்பதுமாக இருந்து வந்துள்ளனர்.
கோவைக்கு சென்று வீட்டிற்கு அழைத்த கணவன்:
இந்நிலையில், பிரியா தனது உறவினருடன் நெருங்கி பழகுவது புகைப்பட ஆதாரத்துடன் பாலமுருகனுக்கு தெரியவந்துள்ளது. இதில், கடும் ஆத்திரமடைந்த பாலமுருகன் இச்சம்பவத்தால் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார். இதைத்தொடர்ந்து, கோவைக்கு வந்த பாலமுருகன், பிரியா தங்கி இருந்த விடுதிக்குச் சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அதனை ஏற்க மறுத்த ஸ்ரீ பிரியா வீட்டிறு வர முடியாது என பிடிவாதமாக இருந்துள்ளார்.
மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்:
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பாலமுருகன் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் பிரியாவை விடுதி வளாகத்தில் வைத்தே சரமாரியாக வெட்டி துடிதுடிக்க கொலை செய்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த பிரியா ரத்த வெளத்தில் சரிந்து கிடந்துள்ளார். பின்னர், மனைவியின் சடலத்துடன் பாலமுருகன் புகைப்படம் எடுத்துகொண்ட அவர், போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் வரை அங்கேயே காத்திருந்துள்ளார்.
இதையும் படிக்க : முதலிரவுக்கு மறுத்த மனைவி.. புதுமாப்பிள்ளை வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!
சடலத்துடன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்:
அதோடு, சடலத்துடன் தான் கால்மேல் கால் போட்டு, கூலாக இருக்கும் புகைப்படத்தை தனது வாட்ஸ் அப்-பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதோடு, அதில் “துரோகத்தின் சம்பளம் மரணம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பாலமுருகனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.